IPL 2024 Playoff: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்து. முதல் அணியாக மும்பை வெளியேறியுள்ளது.


பிளே-ஆஃப் சுற்று - மும்பை வெளியேற்றம்: 


நடப்பாண்டடிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி அதிரடி பேட்டிங், பவுண்டரி மழைகள், த்ரில் வெற்றிகள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை 51 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்று நெருங்கி வருகிறது. புள்ளிப்பட்டியலில்  முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. எனவே, தற்போது பிளே-ஆஃப் சுற்றுக்கான நான்கு இடங்களுக்கு 9 அணிகள் முட்டி மோதி வருகின்றன. ஒரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 16 புள்ளிகள் அவசியம்.  அந்த வகையில் 9 அணிகளுக்கான வாய்ப்புகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ்:


சென்னை அணி மீதமுள்ள நான்கு லீக் போட்டிகளில், மூன்றில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அணிகளான பஞ்சாப், குஜராத் மற்றும் பெங்களூர் உடன் மோத உள்ளது. டேபிள் டாப்பரான ராஜஸ்தான் உடனும் ஒரு போட்டி நடைபெற உள்ளது. தற்போது 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள சென்னை அணி, இன்னும் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் ரன் ரேட் அடிப்படையிலாவது பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.


ராஜஸ்தான் ராயல் அணி:


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் எட்டில் வென்று, 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இருந்தபோதிலும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் வாய்ப்பைப் பெறவில்லை. மீதமுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி எளிதில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 


கொல்கத்தா அணி துவர விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக களமிறங்க உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதியாக்க கொல்கத்த குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம். தவறும்பட்சத்தில், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து அவர்களின் தகுதி சாத்தியமாகும்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 


ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10வது இடத்தில் உள்ளது. 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட, RCB மொத்தமாக 14 புள்ளிகளை மட்டுமே எட்டும். ஒரு தோல்வியை சந்தித்தால் கூட அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் 2024 பிளேஆஃப் பந்தயத்திலிருந்து RCB வெளியேறும்.


பஞ்சாப் கிங்ஸ்:


பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த, பஞ்சாப் கிங்ஸ் முக்கியமான 16 புள்ளிகளைப் பெற மீதமுள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனாலும் அவர்களின் மோசமான  ரன் ரேட் -0.662 காரணமாக பிளேஆஃப் வாய்ப்பைப் பெற மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.


குஜராத் டைட்டன்ஸ்:


இரண்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியாளர்களான குஜராத் டைட்டன்ஸ்,  இந்த ஆண்டு ஐபிஎல் 2024 பிளேஆஃப் சுற்றை அடைவது மிகவும் கடினமான சூழலாக உள்ளது. குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடி 4ல் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. ரன் விகிதமும் மற்ற அணிகளை விட மோசமாக உள்ளது, குஜராத் டைட்டன்ஸ் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளை எட்ட முடிந்தாலும், ஐபிஎல் 2024 பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள்,  அவர்களின் மோசமான ரன் ரேட் காரணமாக மிகவும் குறைவாகவே இருக்கும்.


டெல்லி கேபிடல்ஸ்:  


டெல்லி கேபிடல்ஸ் தற்போது 11 ஆட்டங்களில் 5 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 புள்ளிகளை எட்ட, ஐபிஎல் 2024 பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற, மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியாது. DC இன் தலைவிதி மற்ற அணிகளின் குறைவான ரன் ரேட்டை பொறுத்தது. 


சன்ரைசர்ஸ் ஐதராபாத்:


இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபாரமான அணியாக உருவெடுத்துள்ளது. 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகள் MI, LSG, GT மற்றும் PBKS க்கு எதிரானவை. ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த போட்டிகளில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டில் வெற்றி பெற்றால்,  பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன், புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. LSGயின் வரவிருக்கும் 4 போட்டிகள் KKR, SRH, DC, மற்றும் MI ஆகியவற்றுக்கு எதிரானவை. பிளே-ஆஃப் சுற்றுக்கான தங்கள் நிலையை வலுப்படுத்த, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தால், அவர்களின் விதி மற்ற அணிகளின் செயல்திறனைப் பொறுத்தது.