லக்னோ - ராஜஸ்தான்:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் இந்த சீசனில் 44 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 27) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.


197 ரன்கள் இலக்கு:


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினார்கள்.





இதில் 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற குயின்டன் டி காக் 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். அப்போது களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த சூழலில் கேப்டன் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் தீபக் ஹூடா. 


இவர்களது ஜோடி ராஜஸ்தான் ராயல் அணியின் பந்து வீச்சை சிதறடித்தது.





அந்தவகையில் 31 பந்துகள் களத்தில் நின்ற தீபக் ஹூடா 7 பவுண்டரிகள் விளாசி 50 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திகொண்டிருந்தார் கேப்டன் கே.எல்.ராகுல். மொத்தம் 48 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 76 ரன்களை குவித்தார். இவ்வாறாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பேட்டிங் செய்கிறது.