நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் தற்போது வரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் நடப்புத் தொடரில் இரண்டு முறை கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியின் மோசமான ஃபார்மில் இருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஐபிஎல் தொடருக்கு பின்பு நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான அணியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆங்கில தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர், “இந்த மாதிரியான ஃபார்மில் ஒரு வீரர் தவிப்பது இது முதல் முறையல்ல. விராட் கோலியிடம் நாங்கள் இது குறித்து ஆலோசனை நடத்துவோம். அவருக்கு ஓய்வு வேண்டும் என்றால் அது வழங்கப்படும். அதேபோல் அவர் விளையாட விரும்பினாலும் அதுவும் பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்கோர்:
41* vs பஞ்சாப்
12 vs கொல்கத்தா
5 vs ராஜஸ்தான்
48 vs மும்பை
1 vs சென்னை
12 vs டெல்லி
0 vs லக்னோ
0 vs சன்ரைசர்ஸ்
9 vs ராஜஸ்தான்
தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா, கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அதைத் தொடர்ந்து அயர்லாந்து டி20 போட்டி மற்றும் இந்தியா-இங்கிலாந்து 5ஆவது டெஸ்ட் ஆகியவை நடைபெற உள்ளது. இதன்காரணமாக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. ஆகவே அதற்கு முன்பாக முக்கிய வீரர்களுக்கு போதிய ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்