ஐபிஎல் 2023 இன் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இம்முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்று தெரிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு குஜராத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. சென்ற ஆண்டு கோப்பையை வென்ற குஜராத் அணி இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்தி முதல் ஆளாக முன்னேறி வந்த நிலையில், இறுதிப் போட்டியை கடந்த ஆண்டு ராஜஸ்தானை வென்ற அதே அகமதாபாத் மைதானத்தில் ஆட உள்ளது. இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் அவர்கள் இரண்டாவது முறையும் கோப்பையை வெல்வார்களா என்ற கேள்வி இருந்தாலும், கடந்த முறை அந்த அணி ராஜஸ்தான் அணியை வென்றது எவ்வாறு என்று நினைவுகூர்வது, சென்னை அணி அவர்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்த புரிதலை ஏற்படுத்தும்.
முதலில் ஆடிய ராஜஸ்தான்
கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். பெரிய ஸ்கோரை குவிக்கும் முயற்சியில் இருந்த அணியினரை குஜராத் அணி தங்களது பலமான பந்து வீச்சால் துவம்சம் செய்தது. முதலில் அடிக்க ஆரம்பித்த ஜெய்ஸ்வால் (16 பந்துகளில் 22 ரன்கள்), யாஷ் தயாள் பந்துவீச்சில், சாய் கிஷோரிடம் கெட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 14 ரன்கள்) பான்டியாவின் பந்து வீச்சில் அதே சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, பாண்டியா ஜோஸ் பட்லரையும் (35 பந்துகளில் 39 ரன்கள்), ஹெட்மயரையும் (12 பந்துகளில் 11 ரன்கள்) வீழ்த்தினார். பின்னர் ரஷீத் மற்றும் சாய் கிஷார் சூழலில் அணி மொத்தமாக சரிய, ராஜஸ்தான் அணியால் வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷமி ஒரு பயங்கரமான யார்க்கர் வீசி ஓவரை ரியான் பராக் போல்டுடன் முடித்தார்.
எளிதாக சேஸ் செய்த குஜராத்
130 என்னும் எளிய ஸ்கோரை வழக்கம்போல் கில் எளிதாக வெற்றிக்கு இழுத்து சென்றார். அவர் சந்தித்த முதல் பந்தில் கொடுத்த எளிய கேட்சை தவறவிட்டு சஹல் பெரும் தவறிழைத்தார். அதன் பின் நிலைத்து ஆடிய அவர், 43 பந்துகளில் 45 ரன்கள் நிதானமாக குவிக்க, மறுபுறம் ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் அதிரடி காட்டி வெற்றிக்கு இழுத்து சென்றனர். இந்த போட்டியில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து பதறாமல், சிதறாமல் நேர்த்தியாக வெற்றியை வசப்படுதியது குஜராத் அணி. அதற்கு பக்க பலமாக கில் நின்றார். கில், பாண்டியா, மில்லர் மூவருமே தலா ஒரு சிக்ஸ் மற்றும் மூன்று பவுண்டரிகள் எடுத்திருந்தனர். இந்த இலக்கை 19வது ஓவரின் முதல் பந்திலேயே எட்டினர் குஜராத் அணியினர்.
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியின் முழு ஹைலைட்ஸ் கான இங்கே கிளிக் செய்யவும்
இம்முறை என்னாகும்?
இந்த போட்டியில் மூன்று முக்கியமான விக்கெட்டுகள் எடுத்ததோடு 34 ரன்களையும் குவித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், போட்டி முழுவதும் குஜராத் அணியின் ஆதிக்கம் இருந்ததுதான். அவர்களது எல்லா பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள். லாக்கி ஃபெர்குசனை தவிர எல்லோருமே விக்கெட் எடுத்தனர். ஒரே ஒருவர் மட்டுமே சேஸ் செய்ய வேண்டும் என்று நினைக்காமல், அணியாக இணைந்து வெற்றிக்கு சென்றனர். அந்த அணியில் இப்போது சிறு மாற்றங்கள் இருந்தாலும், அதே உத்வேகததுடன், அதே நிதானத்துடன், அதே ஆதிக்கத்துடன்தான் இப்போதும் உள்ளார்கள். அந்த கோட்டையை தகர்க்க தோனியிடம் உள்ள தந்திரங்கள் பலிக்கின்றனாவா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!