இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இன் 16வது சீசனின் வெற்றியாளர் யாரென்று இன்று இரவு தெரிந்து விடும். எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் இந்த பட்டத்தை வெல்ல மோதவிருக்கின்றனார்.


ஐபிஎல் போட்டி


உலகின் மிகவும் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக ஐ.பி.எல். இருப்பதால், இந்த டைட்டில் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக மாறி உள்ளது. கோல்டன் ஐபிஎல் கோப்பை என்பது மிகவும் உயரிய படமாக உருவெடுத்துள்ளது. அதனை வெல்ல பல ஜாம்பவான்கள் மற்றும் 10 அணிகள் உயிரைக் கொடுத்து விளையாடுகின்றனர். அதே போல பத்து அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில் தற்போது 2 அணிகள் மட்டுமே மிச்சம் உள்ளன. இதில் வெல்லும் அணி பெருமைமிகு கோப்பையை தட்டி செல்லும் என்பதால் ரசிகர்கள் உற்சாகததுடன் காத்திருக்கின்றனர். அதுவும் இதில் மிகவும் வலுவான அணியாக உருவாகியுள்ள குஜராத் அணியை சென்னை எதிர்கொள்வதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.



கோப்பையில் சமஸ்கிருத வார்த்தை 


பிரமிக்க வைக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ள ஐபிஎல் கோப்பை உலகின் மிக அழகான கோப்பைகளில் ஒன்றாக உள்ளது. அந்த கோப்பையில் பலரும் கவனித்திருக்க கூடும், அதன் நடுவில் சமஸ்கிருதத்தில் ஒரு செய்தி பொறிக்கப்பட்டிருக்கும். அது என்ன என்று என்றாவது சிந்தித்தது உண்டா? சமஸ்கிருதத்தில் அதில் பொறிக்கப்பட்ட வாசகம், "யத்ர ப்ரதிபா அவசர ப்ராப்னோதிஹி" என்பதுதான்.


தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Prize Money: கோப்பையை வெல்லப்போகும் அணிக்கு இத்தனை கோடியா? 25 சதவிகிதம் உயர்த்த திட்டம்!


அதற்கு என்ன பொருள்?


அந்த சமஸ்கிருத சொற்களுக்கு பொருள், "திறமை, வாய்ப்புகளை சந்திக்கும் இடம்" என்பதுதான். இந்த ஒற்றை வாசகம் ஒட்டுமொத்த ஐபிஎல் கான்செப்ட்- இன் அவசியத்தை, முக்கியத்துவத்தை விளக்குகிறது. திறமை உள்ள வீரர்களுக்கு தக்க தளம் அமைத்து கொடுக்கும் இடம்தான் ஐபிஎல் என்ற விளக்கத்தை அந்த கோப்பையில் பொறித்துள்ளனர். வெறும் வார்த்தைகளில், கோப்பையில் மட்டும் இல்லாமல், அதனை தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறது ஐபிஎல். உலக வெற்றியாளர்களாக மாறிய ஏராளமான இளைஞர்களுக்கு முதல் படியாக இது உள்ளது.



ஐபிஎல் உருவாக்கிய வீரர்கள்


இன்று இந்திய அணியில் முக்கிய இடங்களை நிரப்பும் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் தொடங்கி பும்ரா, முகமது சிராஜ் வரை ஐபிஎல் தொடர்களில் நன்றாக திறனை வெளிப்படுத்தி பின்னர் இந்திய அணிக்காக ஆட வந்தவர்கள் தான். இன்னும் ஒரு படி மேலே சென்றால், சேலத்தின் அருகே ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்த நடராஜன், உத்தரப்பிரதசத்தின் ஒரு எளிமையான குடும்பத்தில் இருந்து வந்த ரிங்கு சிங், மும்பையில் பாணி பூரி விற்பவரின் மகனாக இருந்து வந்த ஜெய்ஸ்வால் என பலருக்கும் தளம் உருவாக்கி கொடுத்து வருகிறது. இன்னும் இந்திய அணியின் எதிர்காலம் இந்தில் இருந்து தான் வரப்போகிறது என்பதும் உறுதியான ஒன்றுதான். 


இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!