Hardik Pandya: ஐபிஎல் தொடரில் விரைவில் மீண்டும் பந்து வீசுவேன் என, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ய்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


முதல் வெற்றியை ருசித்த மும்பை:


நடப்பு தொடர்ந்து மூன்று தோல்விகளால் துவண்டு கிடந்த மும்பை, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வென்று புத்துயிர் பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 234 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியல் 205 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கும் முன்னேறியது. 


ஹர்திக் பாண்ட்யாவிற்கு என்ன ஆச்சு?


இதனிடயே, மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு என்ன ஆனது? அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. காரணம் மும்பை அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும், பாண்ட்யா ஒரு ஓவரை கூட வீசவில்லை. அதேநேரம், முதல் 2 போட்டிகளில் அவர் பவர்-பிளேயிலேயே பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. இதனால், அவருக்கு மீண்டும் காயம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.


பாண்ட்யா தந்த விளக்கம்:


டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு நடைபெற்ற் செய்தியாளர் சந்திப்பில், பந்து வீசாதது ஏன் என்பது குறித்து பாண்ட்யாவிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில்,””எல்லாம் நன்றாக உள்ளது. சரியான நேரத்தில் நான் பந்து வீசுவேன். தேவையான பந்துவீச்சாளர்கள் இருந்ததால், நான் பந்துவீச வேண்டிய அவசியம் இல்லை.


இந்த வெற்றி உணர்வை அடிக்கடி பெற விரும்புகிறேன். அணியை நிலைநிறுத்துவது முக்கியம். நிறைய அன்பும் அக்கறையும் எங்களுக்கு கிடைத்தது, நாங்கள் மூன்று ஆட்டங்களில் தோற்றோம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் எங்களில் நிலையான பயணத்திற்கு  ஒரு வெற்றி மட்டுமே தேவை என்று அனைவரும் நம்பினோம், இன்று அந்த தொடக்கம் கிடைத்தது” என பாண்ட்யா விளக்கம் தந்தார்.


மீண்டு வந்த ஹர்திக்:


கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் போது, வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்தார். இதன் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய அவர், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்களிலும் பங்கேற்கவ்ல்லை. 4 மாத கால சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு, ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் பாண்ட்யா கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு தொடர்களிலும் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்ட்யா, ட்ரேட் முறையில் இந்த தொடரில் மீண்டும் மும்பை அணிக்காக திரும்பியுள்ளார்.