ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடும் 17வது சீசன் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியானது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி மார்ச் 24 ஆம் குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எகிறியுள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால் கடந்த முறை குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்த இருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்:
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான குஜராத் அணிக்கு அந்த ஆண்டே கோப்பையை வென்று கொடுத்தவர் ஹர்திக் பாண்டியா. கடந்த வருடமும் இவர் தலைமையிலான குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடியது. இப்படி ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே குஜராத் அணியை வலிமைமிக்க அணியாக மாற்றியவர்.
இச்சூழலில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தங்கள் அணிக்கு ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்தது. இது ரோகித் சர்மா ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் சரிந்தது. மேலும், மும்பை இந்தியன்ஸ் கொடியையும் தீயிட்டு கொளுத்தினார்கள். இதனிடையே குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அந்த அணி நியமித்தது.
இப்படி ஒரு சில மாற்றங்கள் நடைபெற்ற நிலையில் தான் தான் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாட உள்ளார். ஹர்திக் பாண்டியாவின் படையில் விளையாடிய சுப்மன் கில் இந்த முறை அந்த அணியின் கேப்டனாக இருப்பதால் இரு அணிகளும் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்பது உண்மை.
மேலும் படிக்க:CSK vs RCB: சென்னையில் முதல் போட்டி: சேப்பாக்கம் என்றாலே CSK தான்! RCB-யை எத்தனை முறை தோற்கடித்திருக்கிறது தெரியுமா?
மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் 2024...அட்டவணை வெளியானது...முதல் போட்டியில் மோதும் அணி எது தெரியுமா?