ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற குஜராத் அணி, நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
சொதப்பிய ஐதராபாத்:
அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய, ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர், தலா 5 ரன்களை எடுத்து நடையை கட்டினர். ராகுல் திரிபாதி ஒரு ரன்னிலும், கேப்டன் மார்க்ரம் 10 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், 29 ரன்களை சேர்ப்பதற்குள் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பொறுப்பற்ற ஆட்டம்:
இதையடுத்து வந்த வீரர்களும் பொறுப்பற்ற முறையில் விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சன்விர் சிங் 7 ரன்களிலும், அப்துல் சமாத் 4 ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் 49 ரன்களுக்கு எல்லாம் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. இவர்களை தொடர்ந்து வந்த ஜான்செனும் 3 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஒன் - மேன் ஆர்மி:
வந்த வேகத்தில் மற்ற வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து நடையை கட்டினாலும், கிளாசென் மட்டும் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசிய அவர் வெறும் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில், அவருக்கு உறுதுணையாக புவனேஷ்வர் குமார் நிலைத்து நிற்க, இந்த கூட்டணி 36 பந்துகளில் அரைசதம் கடந்தது. ஆனால், கிளாசென் 64 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
குஜராத் உள்ளே, ஐதராபாத் வெளியே:
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. 34 ரன்கள் வித்தியாசத்திலான இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது குஜராத் அணி. சிறப்பாக பந்துவீசிய ஷமி மற்றும் மோகித் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேநேரம், 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்த, ஐதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:
கில் - சுதர்ஷன் கூட்டணி:
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரரான விரிதிமான் சாஹா, 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதேநேரம், மறுமுனையில் சக தொடக்க வீரரான சுப்மன் கில், சாய் சுதர்ஷனுடன் சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் வெறும் 22 பந்துகளிலேயே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன் கில் மற்றும் சுதர்ஷன் கூட்டணியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் அணி கடுமையாக போராடியது. தொடர்ந்து 36 பந்துகளில் 47 ரன்களை சேர்த்து இருந்தபோது, ஜான்சென் பந்துவீச்சில் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 2வது விக்கெட்டிற்கு 147 ரன்களை குவித்தது.
சதம் விளாசிய கில்:
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில், ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 56 பந்துகளில் பூர்த்தி செய்தார். தொடர்ந்து 101 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். இதனிடையே, கேப்டன் பாண்ட்யா 8 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரரான மில்லர் 7 ரன்களிலும், திவேதியா 3 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரஷித் கான், நூர் அகமது மற்றும் ஷமி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
வெளியேறிய ஐதராபாத்:
இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி, வெறும் ரன்களை மட்டும் எடுத்து தோல்வியுற்று நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது.