ஐ.பி.எல் 2024:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் டி20 சீசன் 17. இதில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்:
இந்நிலையில் 5 வது லீக் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினார்கள்.
இருவரும் அருமையான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். 15 பந்துகள் களத்தில் நின்ற சாஹா 4 பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் எடுத்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 31 ரன்களை விளாசினார்.
169 ரன்கள் இலக்கு வைத்த குஜராத் அணி:
பின்னர் களம் இறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த உமர் சாய் 17 ரன்களும், டேவிட் மில்லர் 12 ரன்களும் எடுத்தனர். சாய் சுதர்சன் 39 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 45 ரன்களை குவித்தார். ராகுல் டேவாடியா 22 ரன்களை விளாச 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு மொத்தம் 168 ரன்கள் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டி செய்ய உள்ளது.
முன்னதாக இன்றைய போட்டியில் முதன் முறையாக ரோகித் சர்மா கேப்டனாக இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி களம் கண்டு வருகிறது. அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியை சுப்மன் கில் கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்துவது இதுவே முதன் முறை என்பதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.