ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கண்ட தோல்விக்கு, டெல்லி அணியை பழிவாங்க ஐதராபாத் அணி முனைப்பு காட்டி வருகிறது.


டெல்லி - ஐதராபாத் அணிகள் மோதல்:


வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில், இரண்டாவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கக்கூடிய அணிகளான சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்ற்ன.  டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நேரலையை,  நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இந்த இரு அணிகளுக்கு இடையே நடப்பண்டில் ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில், டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.


இதுவரை ஐதராபாத் அணி 


மார்க்கரம் தலைமையிலான ஐதராபாத் அணி இந்த தொடர் தொடங்கியது முதல் ஒரு அணியாக திறம்பட செயல்பட முடியாமல் உள்ளது. ஐதராபத் அணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தடுமாற்றமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் காயத்தினால் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மேற்கொண்டு நீடிக்க வேண்டுமானால் இனிவரும் போட்டிகள் அனைத்திலும் ஐதராபாத் அணி வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான வீரர்கள் அணியில் இருந்தாலும் ஐதராபாத் அணியால் சிறப்பான மற்றும் சவாலான ஆட்டத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தமுடியவில்லை.


இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் 


சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் போல் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ள அணியாக டெல்லி அணி உள்ளது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அனைத்து போட்டிகளிலும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அதேபோல் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக்கூடிய மற்றொரு வீரர் என்றால் அது அக்சர் பட்டேல் தான். பந்து வீச்சில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடும் அக்சர் அணிக்கு நம்பிக்கையாக உள்ளார். சொந்த மண்ணில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணி வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும். இனி வரும் 7 போட்டிகளும் டெல்லி அணிக்கு வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளாகும்.