ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் கடந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஹோம் மற்றும் அவே முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. 


இந்நிலையில் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வழிநடத்தினார். டாஸ் வென்ற அவர் இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்றார். மிகவும் வலுவான பேட்டிங் லைன் - அப்பை வைத்துள்ள, குஜராத் அணி சிறப்பாக தனது ஆட்டத்தினை தொடங்கியது. 


தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் ரன் குவிப்பதை குறைக்கவில்லை. அந்த அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி நிதானமாக ஆடிவந்த கில் சுனில் நரேன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 88 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களை கொல்கத்தாவின் சுனில் நரேன் சீரான இடைவெளியில் வீழ்த்தினார். அதன் பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர் உமேஷ் யாதவ் பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். 


சீரான ரன் குவிப்பில் ஈடுபட்ட குஜராத் அணி 17 ஓவர்களில் 151 ரன்களை எட்டியது. அதன் பின்னர் சாய் சுதர்சன் தனது விக்கெட்டை பறிகொடுக்க, களத்துக்கு மில்லர் வர, விஜய் சங்கரும் மில்லரும் அடித்து ஆடினர்.  கடைசி ஓவரில் விஜய் சங்கர் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இறுதி வரை களத்தில் இருந்த அவர் 24 பந்தில் 63 ரன்கள் குவித்து இருந்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். 


அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்ப, தொடக்கத்தில் கொல்கத்தா அணி தடுமாறியது. அதன் பின்னர் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயருடன் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா கைகோர்த்தார். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் ராணா ஆட்டமிழக்க, வெங்கடேஷ் ஐயர் மட்டும் இடியாய் முழங்கினார். அதன் பின்னர் அவர் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் கொல்கத்தாவின் ரன் வேகத்தை அப்படியே தன் சுழலில் சுருட்டிப் போட்டார் ரஷித் கான். அவர் வீசிய 17வது ஓவரில் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். இதனால் கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற முடியாது என நினைத்து கொல்கத்தா ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் களத்தில் இருந்த ரிங்கு சிங் மீது யாரும் நம்பிக்கை வைத்ததாக தெரியவில்லை. ஆனால் 20வது ஓவரின் கடைசி ஐந்து பந்துகளை எதிர் கொண்ட அவர் 28 ரன்கள் அடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் உமேஷ் யாதவ். அடுத்த ஐந்து பந்துகளை எதிர் கொண்ட அவர் முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். அடுத்த பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என இருந்தது. அதற்குள் குஜராத் அணியினர் ஏதேதோ திட்டம் தீட்ட இறுதி பந்தில் ரிங்கு சிங் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.  ஸ்லோவர் ஷார்டாக வீசப்பட்ட பந்தை சிக்ஸருக்கு விரட்டி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.  இறுதியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.