ஐபிஎல் வரலாற்றில் பேட்டிங்கில் மிகவும் அரிதான சாதனைகளை அதிரடி ஆட்டக்காரரான கெயில் தன்னக்கத்தே கொண்டுள்ளார். 


ஐபிஎல் தொடரில் கெயில்:


கிறிஸ் கெயில் களமிறங்கினாலே எத்தனை பந்துகள் பவுண்டரிகளை கடந்து பறக்க உள்ளது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெயில் தனது பேட்டிங்கால் அத்தகைய தாக்கத்தை ரசிகர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 142 போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 4965 ரன்கள் எடுத்துள்ளார் . அதில் 6 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 175* ரன்கள் ஆகும். அதில் அடங்கியுள்ள ஐந்து முக்கிய சாதனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.


1. அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:


ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் தனிநபரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக, கெயில் எடுத்த 175 ரன்கள் உள்ளது. 2013ம் ஆண்டு புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில், 66 பந்துகளில் 175 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகள், 17 சிக்சர்கள் அடங்கும். அந்த பட்டியலில், 158 ரன்கள் உடன் மெக்கல்லம் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


2. ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள்:


ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்களின் பட்டியலிலும் கெயில் முதலிடத்தில் உள்ளார். 2013ம் ஆண்டு புனே அணிக்கு எதிராக 175 ரன்கள் எடுத்த இன்னிங்ஸில், அவர் 17 சிக்சர்களை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் விளாசியது குறிப்பிடத்தக்கது.


3. ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் 


ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் கெயில் தான் படைத்துள்ளார். 2013ம் ஆண்டு புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெறும் 30 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.


4. அடுத்தடுத்து ஆரஞ்ச் தொப்பியை வென்ற வீரர்:


ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் கெயில் மட்டுமே பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய கெயில் 12 போட்டிகளில் விளையாடி 608 ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதற்கடுத்த ஆண்டு நடந்த தொடரில் 733 ரன்களை சேர்த்து மீண்டும் ஆரஞ்சு தொப்பியை வென்றது குறிப்பிடத்தக்கது.


5. 350 சிக்சர் அடித்த ஒரே வீரர்


ஐபிஎல் வரலாற்றில் 350 சிகர்களை விளாசிய ஒரே வீரர் எனும் சாதனையையும் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். இதுவரை 142 போட்டிகளில் விளையாடி 357 சிக்சர்களை கெயில் விளாசியுள்ளார்.


6. ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர்:


ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையும் கெயிலின் பெயரில் தான் உள்ளது. அதன்படி ஒரே ஓவரில் அவர் 36 ரன்களை விளாசியுள்ளார். ஆனால், இந்த சாதனையை இந்திய வீரர் ஜடேஜா சமன் செய்துள்ளார். அதேநேரம், இவர்கள் யாருமே ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து 36 ரன்களை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


7. அதிக சதமடித்த வீரர்:


6 சதங்களை விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் கெயில் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தலா 5 சதங்களுடன் கோலி மற்றும் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.