சென்னை அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் மற்றும் படிக்கல் சிறந்த தொடக்கத்தை தந்தனர். அதன்பிறகு வந்து பிரேக் கொடுத்தார் ஜடேஜா. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்து ஆட்டத்தை திருப்ப, ரன் ரேட் குறைந்து, 175 ரன் என்ற எதிர்பார்ப்புக்கு குறைவான ஸ்கோரையே எட்டினர். தொடர்ந்து ஆடிய சென்னை அணியும் அதே போல முதல் விக்கெட்டை சீக்கிரம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ரஹானே, கான்வே ஜோடி சேர்ந்து நன்றாக ஆட்டத்தை நகர்த்தி சென்றனர். 78 ரன்களில் இந்த ஜோடி பிரிய, அதன்பிறகு ராஜஸ்தான் போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 113/6 என்ற நிலைக்கு வந்தனர். 



தோனி செய்த அதகளம்


அப்போது வந்தார் உலகின் சிறந்த ஃபினிஷர். கிட்டத்தட்ட 3 ஓவர்களுக்கு 53 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்து கடைசி மூன்று பந்தில் 7 ரன் என்று பார்ப்பதற்கு எளிதாக மாற்றி வைத்தபோது, பழைய தோனி முழுமையாக வந்திறங்கிய மகிழ்ச்சி அனைவருக்குமே இருந்திருக்கும். அந்த அளவுக்கு நேர்த்தியான, தெளிவான அணுகுமுறையை அவர் முன்வைத்தார். அவரது ஃபிளாட் சிக்ஸர்கள் 2007 டி20 உலகக்கோப்பை தோனியையே ஞாபகப்படுத்தியதாக பலர் மெச்சினர். ஆனால் அணி தோல்வியை தழுவிய நிலையில், பேச்சிலும் தான் வின்டேஜ் தோனிதான் என்று நிரூபிக்கும் வகையில், ஆட்டத்திற்கு பிறகான பேட்டியில் நேர்மையான பதில்களையும் வழங்கினார். 


தொடர்புடைய செய்திகள்: விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? அம்பேத்கர் சிலைக்கு மாலை.. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.. பரபரப்பாகும் அரசியல் களம்..!


எங்கே தவறு நடந்தது?


தோல்வியின் காரணம் குறித்து பேசிய தோனி, "மிடில் ஓவர்களில் எங்கள் அணி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களிடம் நிறைய ஸ்பின்னர்கள் இல்லை, அவர்கள் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருந்தனர், அதனால் எங்களால் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை ரோடேட் செய்ய முடியவில்லை. ஜடேஜாவும் நானும் கடைசி நம்பிக்கைக்குரிய பார்ட்னர்ஷிப்பாக இருந்ததால் நாங்களே நின்று முடிக்க வேண்டியது நல்லது என்று நினைத்தோம். தொடரின் இறுதி கட்டத்திற்கு வரும்போது, இது நெட் ரன் ரேட்டை பாதிக்கிறது.", என்றார். 






சேஸிங் டெக்னீக்


தோனி தனது சேஸிங் டெக்னீக் குறித்து பேசுகையில், "பிட்சைப் பார்க்கிறோம், பந்து வீச்சாளர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதைப் கவனிக்கிறோம், அதன் பிறகு அமைதியாக நின்று அவர்கள் தவறை சரி செய்யும் வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் நல்ல பகுதிகளில் பந்துவீசினால் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நான் அதற்காக காத்திருப்பேன், அந்த டெக்னீக் எனக்கு வேலை செய்கிறது. நீங்கள் உங்கள் பலத்தை ஆதரிக்க வேண்டும், நேராக அடிப்பதே எனது பலம். மைதானத்தில் கொஞ்சம் பனி இருந்தது, பந்து அவுட்ஃபீல்டுக்கு சென்று வரும்போதெல்லாம், அது பேட்டிங்கை எளிதாக்கியது. ஒட்டுமொத்தமாக நான் பந்துவீச்சாளர்களால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்", என்று கூறினார். 


200வது போட்டி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக தோனி விளையாடும் 200வது போட்டி இதுவாகும். அது குறித்து கேட்டபோது, "இது எனது 200வது போட்டி என்று எனக்கு தெரியாது. மற்றும் மைல்ஸ்டோன்கள் எனக்கு முக்கியமில்லை, நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதும், முடிவுகளும்தான் முக்கியம். எனக்கு 199வது போட்டியும், 200வது போட்டியும் ஒன்றுதான். எல்லா ஆட்டத்தையும் அனுபவித்து ஆடுவதே முக்கியம்", என்றார்.