சென்னையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு வெற்றியை பரிசளிக்கவுள்ளதாக, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். 


நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் இதுவரை  3 போட்டிகளில் விளையாடி விட்ட நிலையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியும்,ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி என புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில், ஒரு தோல்வியுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆக நாளைய ஆட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


தோனியின் 200வது போட்டி 


இதற்கிடையில் நாளை நடக்கும் போட்டி சென்னை அணியின் ரசிகர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  கேப்டனாக தோனி விளையாடும் 200வது போட்டி இதுவாகும். அவரின் 200வது போட்டி உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் நிலையில் பலரும் சென்னை அணியையும், தோனியையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி இதுவரை 237 போட்டிகளில் விளையாடி விட்டார். 


இதில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி 2016, 2017 ஆகிய  2 ஆண்டுகள் தோனி ரைசிங் ஜெயன்ட்ஸ் புனே அணிக்காக விளையாடினார். இதில் 2016 சீசனில் தோனி அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2017 ஆம் ஆண்டு சீசனில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்ஸி கீழ் விளையாடினார். தொடர்ந்து கடந்தாண்டு சீசனில் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.


ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டு சில போட்டிகள் விளையாடினார். ஆனால் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது.அதோடு  மட்டுமல்லாமல், தனக்கு அழுத்தம் ஏற்படுவதால் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என கோரி ஜடேஜா கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த தோனி மீண்டும் கேப்டனானார். தொடர்ந்து இந்தாண்டும் கேப்டனாக அணியை வழி நடத்தி வருகிறார். 


தோனிக்கு காத்திருக்கும் பரிசு


இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக 200வது போட்டியில் விளையாடும் தோனிக்கு சேப்பாக்கம் ரசிகர்களின் முன்னிலையில் வெற்றியை பரிசளிப்போம் என சக வீரர் ரவீந்திர ஜடேஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். சென்னை மட்டுமல்ல இந்தியாவே போற்றக்கூடிய ஜாம்பவான் அவர் எனவும் ஜடேஜா புகழ்ந்துள்ளார். இதனையடுத்து சென்னை அணியில் காயமடைந்த வீரர்களின்  நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மொயின் அலி தற்போது நன்றாக உள்ளதாகவும், பென் ஸ்டோக்ஸ் 5,6 நாட்களில் குணமாகி விடுவார் எனவும் கூறியுள்ளார். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் நிலை குறித்து தெரியவில்லை என ஜடேஜா தெரிவித்தார்.