ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12வது முறையாக, பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறி அசத்தியுள்ளது. வேறு எந்த அணியும் இதுவரை 10 முறை கூட பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறியது கிடையாது. 


பிளே-ஆஃப் சுற்றில் சென்னை அணி:


டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பெற்ற அபார வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் இரண்டாவது அணியாக சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், ஐ.பி.எல். வரலாற்றில் 12வது முறையாக சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதுவரை நடந்த 16 ஐ.பி.எல். தொடர்களில் சென்னை அணி 14 தொடர்களில் தான் பங்கேற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறவில்லை.


நடந்து முடிந்த 15 தொடர்களில் 8 முறை சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு அடுத்த படியாக மும்பை அணி தான் 9 முறை பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும், ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு, சென்னை அணி இதுவரை விளையாடிய அனைத்து தொடர்களிலும், அந்த அணிக்கு தோனி தான் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி:


2008 - 2வது இடம்


2009- நான்காவது இடம்


2010 - சாம்பியன்ஸ்


2011 - சாம்பியன்ஸ்


2012 - 2வது இடம்


2013 - 2வது இடம்


2014 - 3வது இடம்


2015 - 2வது இடம்


2018 - சாம்பியன்ஸ்


2019 - 2வது இடம்


2020 - 7வது இடம்


2021 - சாம்பியன்ஸ்


2022 - 9வது இடம்


2023 - பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி


அதிகமுறை பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகள்:


சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 முறை


மும்பை இந்தியன்ஸ் - 9 முறை


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 முறை


கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் - 6 முறை


டெல்லியை வீழ்த்தி அபாரம்:


பிளே-ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் 79 ரன்களையும், கான்வே 87 ரன்களையும் குவித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 223 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் வெறும் 146 ரன்களை மட்டுமே எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.


சென்னைக்கு 2வது இடம்?


டெல்லி அணிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம், லீக் சுற்றின் முடிவில் சென்னை அணிக்கு 2வது இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதன் மூலம், முதல் குவாலிபையர் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியை, சென்னை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி உள்ளூர் மைதானத்தில் நடைபெற இருப்பது, சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.