சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவை போன்றே டெல்லி கேப்டன் வார்னர் தனது பேட்டை வாளை போன்று சுழற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே சிரிப்பலையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.


சென்னை அணி அதிரடி பேட்டிங்:


டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட் 79 ரன்களையும், கான்வே 87 ரன்களையும் குவித்தனர். இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய சிவம் துபே 9 பந்துகளில் 22 ரன்களை குவிக்க, ஜடேஜா 7 பந்துகளில் 20 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது.


டெல்லி அணி தடுமாற்றம்:


இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே திணறியது.பிரித்வி ஷா வெறும்  5 ரன்களில் நடையை கட்டினார். அதேநேரம், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டெல்லி கேப்டன் வார்னர் அரைசதம் விளாசி அசத்தினார்.


போக்கு காட்டிய வார்னர்:


போட்டியில் தீபக் சாஹர் வீசிய ஓவரில் வார்னர் ஒரு ரன் அடித்து விட்டு, இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்தார். ஆனால், சென்னை வீரர் ரகானே உடனடியாக பந்தை எடுத்து வீச முயல்வார். இருப்பினும் அவர் பந்தை கையிலேயே வைத்திருக்க, ரன் எடுக்க ஓடுவது போல போக்கு காட்டினார். இதையடுத்து உடனடியாக பந்துவீச்சாளர் இருப்பிடத்தை நோக்கி ரகானே பந்தை எறிந்தார். அதனை சாஹர் பிடிக்காமல் தவறவிட்டார்.






வாள் சுழற்றிய வார்னர்:


அந்த பந்து நேராக ஜடேஜாவிடம் சென்றது. இதை கண்டதும் வார்னர் மீண்டும் ரன் ஓடுவது போன்று போக்கு காட்டுவார். ஜடேஜாவும் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிவது போன்று போஸ் கொடுக்க, திடீரென நின்ற வார்னர் தனது பேட்டை வாளை போன்று மாற்றி மாற்றி சுழற்றி அசத்தினார். இதை கண்டதும் சிரிப்பை தாங்க முடியாமல் குபீரென சிரித்த ஜடேஜா, பந்துடனேயே அங்கு இருந்து நகர்ந்து சென்றார். ஒட்டுமொத்த மைதானமே இந்த நிகழ்வால் சிரிப்பலையில் மூழ்கியது. வழக்கமாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் போதெல்லம், ஜடேஜா தான் தனது பேட்டை வாளைபோன்று சுழற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இதனை ”ஸ்வார்ட் செலிப்ரேஷன்” என கூறுவர். ஆனால், அவருக்கு எதிராகவே வார்னர் அந்த ”ஸ்வார்ட் செலிப்ரேஷன்” செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.