ஐபிஎல் தொடரின் 2ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.  தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது.


 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சற்று அதிரடியாக தொடக்கம் அளித்தனர். எனினும் முருகன் அஸ்வினின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது. முதலில் டிம் சிஃபெர்ட் மற்றும் மன்தீப் சிங் ஆகிய இருவரின் விக்கெட்டும் விழுந்தது. அதன்பின்னர் பிருத்வி ஷா மற்றும் லலித் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தனர். பிருத்வி ஷா 38 ரன்களில் பசில் தம்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரோவ்மேன் பவல் விக்கெட்டையும் பசில் தம்பி எடுத்தார். இதன்காரணமாக 10 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. 


 


அதன்பின்னர் வந்த ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆட தொடங்கினார். பும்ராவின் ஓவரில் சிறப்பாக பவுண்டரிகளை விளாச தொடங்கினார். அவர் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 16 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. கடைசி 24 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 


 


அப்போது களத்தில் இருந்த அக்சர் பட்டேல் மற்றும் லலித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் ஒவருக்கு ஒரு பவுண்டரி விகிதம் அடித்து வந்தனர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 15 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அக்சர் பட்டேல் மற்றும் லலித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2012ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் எப்போதும் தன்னுடைய முதல் போட்டியில் வென்றதில்லை என்ற சோகத்தை தொடர்ந்துள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண