தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கசேஸ்வரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். 


சட்டபேரவையில் விளையாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது பா.ம.க. இவ்வாறு வலியுறுத்தி உள்ளது. சி.எஸ்.கே. அணியை தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து மக்களிடம் லாபம் பார்க்கின்றனர்.


ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா


இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2008 ஆம் ஆண்டு எட்டு அணிகளுடன் தொடங்கிய கிரிக்கெட் டி-20 தொடர், இப்போது பத்து அணிகளுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்மை, பெங்களூரு, குஜராத், லக்னோ உள்ளிட்ட அணிகளுடன் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் சிறப்பு வெளிநாட்டு அணி வீரர்களும் இதில் பங்கேற்பதுதான். இதற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் சென்னை, மும்பை அணிகளுக்கென தனியே ரசிகர்கள் கூட்டம் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுவும், போட்டிகளின் போது சமூக வலைதளங்களில் இரு அணி ரசிகர்களுக்கும் இடையே நிலவும் போட்டி, கருத்து பரிமாற்றங்கள் சுவாரசியமானதாக இருக்கும்.  யார் சிறந்த அணி என்பது போட்டியாக மாறிடும். 


சென்னை அணி ஏன் பிடிக்கும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் நபர்கள் அதிகமாக சொல்லும் பதில் “ தோனி” என்பதைதான். ஆனால், தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் சென்னை அணியில், தமிழக வீரர்கள் யாரும் இல்லை என்ற கருத்து வெகு காலமாக இருந்து வருகிறது. 


சட்டப்பேரவையில் பா.ம.க. கோரிக்கை


தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கையின் போது, தமிழர்கள் அல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டுமென மக்கள் விரும்புவதாக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியிருக்கிறார்.


இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐ.பி.எல். போட்டியாகும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை. இருப்பினும்,  தமிழக அணி என்பது போல தமிழ்நாட்டு மக்களிடம் விளம்பரம் செய்து பெரும் வர்த்தக லாபத்தை அடைந்து வருவதாக பேசியுள்ளார்.