ஐபிஎல் தொடரில் வெற்றி, தோல்விகள் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி சொன்ன கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி, போட்டிகளில் கிடைக்கும் முடிவுகளிலிருந்து இளைஞர்கள் படிப்பினை பெற வேண்டும் என கூறியுள்ளார்.


சென்னை - டெல்லி மோதல்:


நடப்பு தொடரில் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்வதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பெறவும் முடியும். இந்த சூழலில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


”இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்”


டாஸ் வென்ற பிறகு பேசிய தோனி “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதல் போட்டியிலிருந்தே நாங்கள் முயற்சித்து வருகிறோம். கடந்த போட்டியில் விளையாடிய பிளேயிங் லெவனிலேயே இந்த போட்டியிலும் களமிறங்குகிறோம். பகலில் நடைபெறும் போட்டி என்பதால், போட்டி போக போக மைதானம் மெதுவாக மாறிவிடும். அதற்காக தான் நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இதுபோன்ற தொடர்களில் எங்களுக்கு நல்ல போட்டிகளும் அமையும், மோசமான போட்டிகளும் அமையும். ஒவ்வொரு போட்டிகளில் இருந்து நாம் படிப்பினைகளை பெற வேண்டும். அணியில் உள்ள இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் நான் விரும்புகிறேன் ” என குறிபிட்டார்.


சென்னையின் பிளே-ஆஃப் வாய்ப்பு:


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, முடிவில்லா ஒரு போட்டி என மொத்தம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியோ 13 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதோடு, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பெறும் என்பதால், பிளே-ஆஃப் சுற்றில் இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். அதுவும் சென்னையில் மீண்டும் விளையாட சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அது இறுதிப்போட்டிக்கு முன்னேற சென்னை அணிக்கு கூடுதல் பலமாக அமையும். அதே சமயம் தோற்றால் பிற அணிகளின் முடிவுக்காக சென்னை அணி காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.