எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று தனது 4வது போட்டியில் களமிறங்குகியுள்ளது. இந்த போட்டியானது எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

  


இந்த தொடரில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்குகிறது. 


ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஐந்து மோதல்களில் 4 ல் வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும், இன்றைய போட்டியில் சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெற இருப்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் சென்னை அணி மீது உள்ளது. மேலும், சென்னை அணிக்காக தோனி இன்று தனது 200 வது போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார். இதனால் மைதானத்தில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. 


அதேபோல், சென்னை அணி தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி, ஆரஞ்சு கோப்பையை கைப்பற்றினார். அவர் இரண்டு அரை சதங்களுடன் 189 ரன்களை குவித்துள்ளார். இந்த போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட் மற்றும் பந்துவீச்சில் எப்போதும் அசத்தும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா, இந்த போட்டியில் மீண்டும் மிரட்ட காத்திருப்பார். மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில், பவர் பிளே முடிவில் விக்கெட்களை வீழ்த்தி திருப்பம் தந்தார். மேலும், நான்கு ஓவர்கள் வீசி வெறும் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் இவரது பந்து வீச்சு எடுபட்டால் ராஜஸ்தான் அணி சரிவை சந்திக்கும். 


சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள பிட்ச் ஆனது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, இரு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவர். இந்த பிட்சில் 180 ரன்கள் மேல் குவித்தால் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.