17வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 


அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி முதல் ஓவரில் 7 ரன்கள் மட்டும் எடுத்து நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் மற்றும் டூ பிளெசிஸ் ஆகியோர் தொடங்கினர். போட்டியின் முதல் பந்தினை எதிர்கொண்ட விராட் அதன் பின்னர் 4வது ஓவரின் முதல் பந்தினைத்தான் எதிர்கொண்டார். அதுவரை சென்னை அணியின் பந்து வீச்சினை டூ பிளெசிஸ் சிதைத்தார். முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசி அட்டகாசப்படுத்தினார். 


பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில், போட்டியின் ஐந்தாவது ஓவரை முஸ்தபிகுர் வீச வந்தார். அந்த ஓவரில் டூ பிளெசிஸ் தனது விக்கெட்டினை 8 பவுண்டரி விளாசி 35 ரன்கள் குவித்த நிலையில் இழந்தார். அதன் பின்னர் வந்த ரஜித் படிதார் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் வந்த மேக்ஸ் வெல் தனது விக்கெட்டினை டக் அவுட் ஆகி பெங்களூரு அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  இதனால் பெங்களூரு 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டு இருந்தது. இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய கேமரூன் கிரீன் விராட் கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். இருவரும் சரிவில் இருந்த அணியை மெல்ல மெல்ல மீட்டனர். விராட் கோலி இந்த போட்டியில் 21 ரன்கள் சேர்த்தார். இதில் ஒட்டுமொத்த டி20 கெரியரில் 12 ஆயிரம் ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும்,  ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். 


ஆனால் இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் முஸ்தபிகுர் பந்தில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 11.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் கூட்டணி நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி அணியை ஓரளவுக்கு நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சி செய்தனர். 15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்திருந்தது. 


தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக இருவரும் சிக்ஸர்கள் பறக்கவிட்டபடி இருந்தனர். 18வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் ராவத் இரண்டு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசினார்.இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து  173 ரன்கள் சேர்த்தது.