ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள். 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ரஹானே 1 ரன்கள் மட்டுமே எடுத்து மேட் ஹென்றி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
சின்ன சிங்கம் ருதுராஜ் அதிரடி:
அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தார் டேரில் மிட்செல். இவர்களது ஜோடி சென்னை அணிக்கு ரன்களை வேகமாக சேர்த்துக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கையில் மிட்செல் விக்கெட்டை இழந்தார். 10 பந்துகள் களத்தில் நின்ற மிட்செல் 1 பவுண்டரி உட்பட மொத்தம் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் கெய்க்வாட் உடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா.
இவர்களது ஜோடி லக்னோ அணியின் பந்து வீச்சை நொறுக்கியது. இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார்.
19 பந்துகள் களத்தில் நின்ற ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் எடுத்து மொஹிஸ்கான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 12 ஓவர்கள் வரை சென்னை அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. அந்த சூழலில் களம் இறங்கிய ஷிவம் துபே ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இவர்களது ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனிடையே சி.எஸ்.கே அணியின் சின்ன சிங்கம் ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் விளாசினார்.
211 ரன்கள் இலக்கு:
கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை குவித்தார். அதேபோல் ஷிவம் துபே 27 பந்துகள் களத்தில் நின்ற ஷிவம் துபே 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 66 ரன்களை குவித்தார். கடைசி 1 பந்திற்கு களம் இறங்கிய தோனி பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.