ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு கையில் டிக்கெட் வைத்து இருந்தால் மட்டுமே, ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அகமதாபாத்தில் குவிந்த ரசிகர்கள்:


கடந்த 15 சீசன்களை காட்டிலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர், சற்று கூடுதல் பரபரப்பாகவே நடந்து வருகிறது.  70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகான இறுதிப்போட்டிக்கு, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடக்கவிருந்த, இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து இருந்தனர்.


அது சென்னையா? குஜராத்தா? என சந்தேகம் எழும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் மஞ்சள் உடையில் மைதானதில் குழுமியிருந்தனர். குஜராத் அணி கோப்பையை தக்க வைக்குமா? சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.


மழை பாதிப்பு - ரிசர்வ் டே:


ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கனவையும் நீர்த்து போகச் செய்தது அகமதாபாத்தில் கொட்டி தீர்த்தது கனமழை. சில மணி நேரம் இடைவெளி விட்டால் கூட போட்டியை நடத்திவிடலாம் என, ஐபிஎல் நிர்வாகம் நம்பிக்கையுடன் இருந்தது. இதனால், கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்திலேயே காத்துக்கிடந்தனர். இரவு 11 மணிக்குப் பிறகும் கூட மழை விடாததால், ரிசர்வ் டே முறையில் இறுதிப்போட்டி இன்று நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர். அதைதொடர்ந்து, போட்டிக்காக ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகளை கொண்டே, இன்று நடைபெறும் இறுதிபோட்டியை ரசிகர்கள் நேரில் வந்து கண்டுகளிக்கலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.






டிக்கெட்டிற்கான கட்டுப்பாடுகள்:


பழைய டிக்கெட்டே செல்லும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருந்த நிலையில், அதற்கான சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, கையில் டிக்கெட்டின் பிரதி இருக்க வேண்டியது கட்டாயம். டிக்கெட் கிழிந்து இருந்தாலும் அந்த சிறு பகுதியையும் கையில் வைத்து இருக்க வேண்டும். டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அனைத்து விவரங்களும் கிழியாமல் இருக்க வேண்டியது அவசியம். 


டிஜிட்டல் டிக்கெட்டிற்கு அனுமதி இல்லை:


பார் கோட் போன்ற முக்கியமான தகவல்கள் இல்லாத டிக்கெட்டை கொண்டு வந்தால், அனுமதி வழங்கப்படமாட்டாது. அரைகுறை தகவல்களுடன் கொண்டு வரப்படும் டிக்கெட்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. செல்போன் போன்ற மின்சாதனங்களில் கொண்டு வரப்படும் டிஜிட்டல் டிக்கெட்டுக்களும் செல்லாது என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்தும் டிஜிட்டல் மயம், டிஜிட்டல் இந்தியா என மத்திய அரசே ஊக்குவித்து வரும் நிலையில், டிஜிட்டல் டிக்கெட்டிற்கு அனுமதி இல்லை என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.