ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ( CSK vs GT IPL 2023 Final )  சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.


ஐபிஎல் இறுதிப்போட்டி:


பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகு, இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டி, மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


சென்னை அணியின் பலம், பலவீனம்:


சென்னை அணியின் மொத்த பலமாக கேப்டன் தோனியை தான் ரசிகர்கள் கருதுகின்றனர். அவரது தலைமையில் பேட்டிங்கில் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே மற்றும் ரகானே ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் புதிய பந்தில் சாஹர் சிறப்பாக பந்து வீச, இறுதிக்கட்டத்தில் பதிரனா நம்பிக்கை அளிக்கிறார். மத்திய ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பதில் ஜடேஜா ஜொலிக்க, அவருக்கு உறுதுணையாக தீக்‌ஷன கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். குஜராத் அணிக்கு எதிரான முதல் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று இருந்தாலும், முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி வென்று அசத்தியது. அந்த உத்வேகத்திலேயே இன்றைய போட்டியில் சென்னை அணி களமிறங்குகிறது. 


குஜராத் அணியின் பலம், பலவீனம்:


நடப்பு சாம்பியனான குஜராத் அணியின் பலம் என்பது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சரியான கலவையில் அமைந்து இருப்பது தான். குறிப்பாக பேட்டிங்கில் சுப்மன் கில் தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். அவருக்கு உறுதுணையாக விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர் மற்றும் திவேதியா ஆகியோர் அதிரடியான ஃபார்மில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ரஷித் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவராக உள்ளார். வேகப்பந்துவீச்சில் ஷமி மற்றும் மோகித் சர்மா தொடர் முழுவதுமே விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர்.  இன்றைய போட்டியில் வென்று கோப்பையை தக்கவைக்க குஜராத் அணி தீவிரம் காட்டி வருகிறது. அதோடு, இன்றைய போட்டி உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 


மைதானம் எப்படி?


நரேந்திர மோடி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே அமைகிறது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமாக அமையலாம். அதேநேரம், 180 ரன்கள் என்பது இங்கு வெற்றிக்கான இலக்காக பார்க்கப்படுகிறது. 


சிறப்பாக செயல்பட வாய்ப்பு:


இன்றைய போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் முகமது ஷமியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.


உத்தே அணி விவரம்:


சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா


குஜராத்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேட்ச்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி


யாருக்கு வெற்றி வாய்ப்பு?


குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு - அதேநேரம் தோனி மேஜிக் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது