Mumbai Indians: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையரில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
மும்பை த்ரில் வெற்றி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை, நாலாபுறமும் சிதறடித்த குஜராத் அணி நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தோல்வியை இழந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் குஜராத் அணி வீரர்கள் கோட்டை விட்ட கேட்ச் வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி, ரோகித் சர்மா 81 ரன்களை விளாசினார். இந்நிலையில் தான், முக்கியமான போட்டிகளில் மும்பை அணிக்கு மட்டும் லக் எப்போதுமே சாதகமாக இருப்பதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் குறிப்பிட்ட சம்பவம்:
குஜராத் மற்றும் மும்பை அணி இடையேயான எலிமினேட்டர் போட்டி குறித்து தனது யுடியூப் சேனலில் அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தான் கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் அணியை வழிநடத்தியபோது ஏற்பட்ட நிகழ்வை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஒவ்வொரு முறையும் மும்பை அணியிடம் நான் ஒன்றை காண்கிறேன். கடந்த 2018ம் ஆண்டு நான் பஞ்சாப் அணியை வழிநடத்தியபோது, எங்களுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை மட்டுமே சேர்த்து இருந்தது. அவர்களின் தோல்வி தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மின்வெட்டு ஏற்பட்டு மைதான விளக்குகள் 20 நிமிடங்களுக்கு அணைந்தன. மீண்டும் போட்டி தொடங்கியபோது, பொல்லார்டின் ருத்ரதாண்டவத்தால் அந்த அணி 180 முதல் 200 ரன்கள் வரை குவித்தது.
”மும்பைக்கு எப்போதுமே லக்”
மும்பை அணிக்கு எப்போதுமே லக் அடிக்கிறது. ஆமாம், நீங்கள் உங்கள் லக்கை சம்பாதிக்கிறீர்கள். ஆனால், மும்பைக்கு எப்போதுமே லக் அடிக்கிறது. அவர்கள் எப்படி அந்த அளவிற்கு லக் அடிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்” என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக அச்வினின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆதரவும்.. எதிர்ப்பும்..
அஸ்வினின் கருத்தை ஆதரிப்பதாக குறிப்பிட்டு, மும்பை அணி பணம் கொடுப்பது தான் காரணம், அவர்களின் லக்கே ஓனர் அம்பானி தான்”என விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், அஸ்வினின் கருத்துக்கு சிலர் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, “லக் என்பது அனைவருக்கும் கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்துவதே அவசியம். தவறியவர்கள் தோல்வி அடைந்து வெளியேறுவார்கள். முறையாக பயன்படுத்துபவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என குறிப்பிடுகின்றனர்.
குவாலிஃபையர் - 2
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிகு தொடங்கும், இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் 3ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ள உள்ளது.