ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக அதிக கோப்பைகளை வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் முன்பு இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (19 ஏப்ரல் 2008 ) தனது ஐபிஎல் போட்டியில் விளையாடியது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் ஃப்ளே ஆஃப்:


சென்னை அணி இதுவரை 13 முறை ஐபிஎல் போட்டியில் பங்கேற்று மொத்தம் 11 முறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில், 9 முறை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று, 4 முறை பட்டத்தையும், 5 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை அணியால் இதுவரை 2 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. ஐபிஎல் 2020ல் சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத போது இது முதல் முறையாக நடந்தது. அதன்பிறகு, ஐபிஎல் 2022ல் அதாவது கடந்த சீசனிலும் சென்னையால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.


சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை: 



  • ஐபிஎல் 2008 முதல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு சென்றது. ஆனால், இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சென்னையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது.

  • ஐபிஎல் 2009 ம் ஆண்டு சீசனில் சென்னை அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.

  • ஐபிஎல் 2010 ம் ஆண்டு மூன்றாவது சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

  • ஐபிஎல் 2011 ம் ஆண்டு சென்னை, ஆர்சிபியை இறுதிப் போட்டியில் தோற்கடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

  • ஐபிஎல் 2012 ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு சென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் கெளதம் கம்பீரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னையை வீழ்த்தி பட்டத்தை வென்றது.

  • ஐபிஎல் 2013 ம் ஆண்டு கூட தொடர்ந்து நாளாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி வரை சென்றது, ஆனால் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக சிஎஸ்கேவை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது.

  • ஐபிஎல் 2014 ம் ஆண்டு சென்னை அணி மூன்றாவது இடத்தில் இருந்தது.

  • ஐபிஎல் 2015 ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி வரை சென்றது. ஆனால் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் சென்னையை தோற்கடித்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

  • ஐபிஎல் 2016 மற்றும் ஐபிஎல் 2017 இல், தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் பங்கேற்க முடியவில்லை.

  • ஐபிஎல் 2018 ம் ஆண்டு சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி, இறுதிப் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக பட்டத்தை வென்றது.

  • ஐபிஎல் 2019 ம் ஆண்டு கூட, சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி வரை சென்றது, ஆனால் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் நான்காவது முறையாக சிஎஸ்கேயை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது.

  • ஐபிஎல் 2020 ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

  • ஐபிஎல் 2021 ம் ஆண்டு சென்னை மீண்டும் ஒரு வலுவான மறுபிரவேசம் செய்து, இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வென்றது.

  • ஐபிஎல் 2022 ம் ஆண்டு சென்னை அணி ஒன்பதாவது இடத்தில் தனது பயணத்தை முடித்தது. 


சென்னை சூப்பர் கிங்ஸும், தோனியும்:


ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது 2023 வரை சென்னையின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியும் இருப்பதுதான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய சிறப்பு. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் 3 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி 200 க்கு அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருந்து வருகிறார்.