ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் ஆர்சிபி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோதுகிறது. இந்த தொடரைப் பொறுத்தவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்டது. 14 புள்ளிகள் பெற்ற ஆர்சிபி அணி ஏறத்தாழ தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நிச்சயம் உறுதியாகிவிடும்.
காத்திருக்கும் மழை?
இந்த நிலையில், பெங்களூரில் இன்று போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கோடை காலம்தான் என்றாலும் பெங்களூரில் வரும் 7ம் தேதி வரை மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நாளில் அங்கு 33 டிகிரி வானிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் வானம் மேகமூட்டத்துடனும், நண்பகலுக்கு பிறகு இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு சின்னசாமி மைதானம் உள்ள பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தாலும், இன்று போட்டி நடக்கும் நேரத்தில் மழை பிரதானமாக பெய்ய வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அவ்ளோதானா?
இதன்காரணமாக இன்றைய போட்டி திட்டமிட்ட நேரத்தில் தொடங்கப்படுவதில் சிரமம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போட்டி தாமதமாக தொடங்கப்படுவதற்கோ அல்லது ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆடுவதற்கோ அல்லது போட்டி ரத்து செய்யப்படுவதற்கோ வாய்ப்புகள் அதிகளவு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறியதால் இந்த போட்டியின் முடிவு சிஎஸ்கே அணியை எந்தவிதத்திலும் பாதிக்காது. அதேசமயம் போட்டி நடக்காவிட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்படும். அப்படி போட்டி நடக்காமல் ஆர்சிபி அணிக்கு 1 புள்ளி வழங்கப்பட்டாலும் அந்த அணி 15 புள்ளிகள் பெற்று வலுவாகவே இருக்கும்.
பழிதீர்க்கும் போட்டியா?
கடந்தாண்டு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்று ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு சுற்றுக்கு தகுதி பெற்றது. அது முதலே ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியை ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி போல பார்த்து வருகின்றனர். இந்த தொடரிலும் சென்னையில் நடந்த போட்டியில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
இதனால், இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்களும், சிஎஸ்கே அணியை வீழ்த்த வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்களும் விரும்புகின்றனர்.