சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 182 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்று, இந்த ஐபிஎல்லில் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றனர் சென்னை அணியின் ஓப்பனிங் பேட்டர்கள் கான்வே மற்றும் ருதுராஜ்.
நேற்று திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக அறிவிக்க, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் களமிறங்கியது. ஓப்பனிங் களமிறங்கிய கான்வே - ருதுராஜ் ஜோடி அதிரடியாக விளையாடியது. 45 பந்துகளில் அரை சதம் கடந்த ருதுராஜ், ஐபிஎல்லில் 1000 ரன்கள் கடந்து அசத்தினார். 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டி சாதனைப் படைத்திருக்கிறார். இது சச்சினின் ரெக்கார்டை சமன் செய்வதாகும்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ், சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 99 ரன்கள் எடுத்திருந்தபோது நடராஜனின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி இருக்கிறார் அவர். இருப்பினும், 6 சிக்சர் இந்த சீசனில் இந்த இன்னிங்ஸில்தான் ருதுராஜ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ருதுராஜை அடுத்து களமிறங்கிய தோனி 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய கான்வே, 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருக்கிறது சென்னை அணி. முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்திருந்த ருதுராஜ் - கான்வே, 182 ரன்கள் சேர்த்தனர். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது இந்த ஜோடி.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்ற ஓப்பனிங் ஜோடி:
185 - வார்னர்/பேர்ஸ்டோ vs RCB (2019)
184* - கம்பிர்/லின் vs GL (2017)
183 - ராகுல்/மயாங்க் vs RR (2020)
182 - ருதுராஜ்/கான்வே vs SRH (2022)*
ருதுராஜ், கான்வே ஜோடி இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்