இந்த ஐபிஎல் போட்டியில் தனித்து தெரிவது சாய் சுதர்சன் என்னும் தமிழ்நாட்டு வீரர்தான். ஐபிஎல் போட்டிகள் என்றால் அதிரடி என்ற நிலையில் இருந்து சற்று விலகி நேர்த்தியான கிரிக்கெட்டை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கேட்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் சாய் சுதர்சன். குறிப்பாக களத்தில் அவர் வெளிப்படுத்தும் நம்பிக்கையான உடல்மொழி, ஷாட் தேர்வுகளில் உள்ள தெளிவு பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. ஏனெனில் அவருக்கு வயது வெறும் 21 தான். ஒரு தேர்ந்த முதல் தர கிரிக்கெட்டர் போல ஆட்டத்தை வெளிப்படுத்தி அமைதியாக நிற்கும் அவர் பல நெஞ்சங்களை கவர்ந்துள்ளார். 


புகழும் கவாஸ்கர்


"சாய் சுதர்சனிடம் நாம் பார்த்தது நம்பிக்கைதான். அவர் கடந்த ஆண்டு ஐபிஎல்லில் சில ஆட்டங்களில் விளையாடினார். அவருக்கு சில வாய்ப்புகள் தான் கிடைத்தன, அவர் இரண்டு நல்ல இன்னிங்சில் 30+ ரன்களை குவித்தார். ஆனால் இம்முறை அவர் பேட்டிங்கிற்கு வரும்போதே தன்னம்பிக்கையுடன் வந்தார். முதல் பந்தில் இருந்தே அவர் தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பெரிய சவால்களுக்குத் தயாராக இருக்கிறார் என்று அவரது ஆட்டம் சொல்கிறது.


அவர் அதைச் செய்துவிட்டார் என்று இப்போது நினைக்கக்கூடாது. அவர் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. அவர் ஒரு சிறந்த பீல்டரும் கூட, இது ஒரு பிளஸ். இது எல்லாவற்றையும் விட அவருடைய குணம்தான் மிளிர்ந்தது. ஒரு சிறுவனை ஆண் என்று மாற்றுவது குணம்தான் என்று நான் எப்போதும் நம்புகிறேன். விரைவில் சிறந்த வீரராக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு உள்ளது," என்று கவாஸ்கர் கூறினார்.



பாராட்டும் ஹர்திக்


"சாய் சுதர்சன் பயங்கரமாக பேட்டிங் செய்து வருகிறார். அவரை இந்த அளவுக்கு மேம்படுத்திய பயிற்சியாளர்களுக்கு நன்றி. கடந்த 15 நாட்களில் அவர் செய்த பேட்டிங் பயிற்சியின், முடிவுகளைத்தான் நீங்கள் களத்தில் பார்க்கிறீர்கள். இன்னும் முன்னோக்கிச் செல்லும்போது, இதையே அவர் தொடர்ந்தால் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகளில், அவர் குஜராத் அணிக்கு சிறப்பான விஷயங்களை கொண்டு வந்து சேர்த்திருப்பார். வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவுக்கும் கூட," என்று இரண்டாவது போட்டியை சாய் சுதர்சன் வென்று தந்த பின் விளக்கக்காட்சியில் பாண்டியா கூறினார். இப்படி ஊரெங்கும் ஒரு தமிழரின் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் குஜராத் தற்போது டேபிள் டாப்பில் இருக்கிறதென்றால், அதற்கு காரணமாக இருப்பதுதான். முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் காயமடைய இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த அவர், சிறிய கேமியோ ஆடிச்சென்றார். ஆனால் அடுத்த ஆட்டத்தை தோளில் சுமந்து சென்ற அவர், வெற்றியையும் எடுத்து கையில் கொடுத்தார்.


தொடர்புடைய செய்திகள்: கடந்த ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு என புகார்.. ஈபிஎஸ்ஸை விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி..!


தாய் - தந்தை


54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாறிய நிலையில், விஜய் சங்கருடன் இணைந்து கிளாசிக்கான இன்னிங்ஸை வெளிப்படுத்தி ஆட்டத்தை எடுத்து சென்றார். குறிப்பாக அவர் அடித்த ஷாட்களை அனைத்துமே வித்தியாசமான ஷாட்கள். 360 டிகிரியில் அடிக்கும் வல்லமை கொண்ட அவருக்கு நேர்த்தியான கிரிக்கெட் கைகூடி வந்துள்ளது. அந்த போட்டியில் அவர் 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 62 ரன்கள் குவித்து வெற்றிக்கு அணியை இழுத்து சென்றார். சென்னை அணியிலேயே தமிழக வீரர்கள் இல்லாதபோது, மற்ற அணிகள் தமிழக வீரரை நம்பும் நிலையில் நம்ம ஊரு பையன் ஒருவர் மிளிர்ந்து வருவது பெருமைதான். ஐபிஎல் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அவர் பூர்விகம் பெரும்பாலான கிரிக்கெட்டர்கள் போல மயிலாப்பூர்தான். இவரது தந்தை பரத்வாஜ் தெற்காசிய தடகள போட்டிகளில் இந்தியாவுக்காக களம் கண்டவர். தாய் உஷா, தமிழநாடு வாலிபால் அணிக்காக ஆடியவர். இத்தகைய பெருமை கொண்ட விளையாட்டு குடும்பத்தில் பிறந்த இவர் இந்த உயரத்தை எட்டியுள்ளார்.



ஐபிஎல் என்ட்ரி


பாளையன்பட்டி ஷீல்டு ராஜா என்ற தொடரில் ஆழ்வார்பேட்டை சிசி அணிக்காக விளையாடிய அவர் 635 ரன்கள் குவித்து அசத்தி தற்போது இந்த இடத்தில் நிற்கிறார். 14 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணியில் இருந்து கிரிக்கெட் வாழ்வை துவங்கிய இவர், 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின் விஜய் ஹசாரே ட்ராஃபியில் 2021 இலும், ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் 2022 இலும், அதே வருடம் முஸ்தாக் அலி கோப்பையிலும் அறிமுகமாக வேகமாக வளர்ந்து வந்தார்.


ரஞ்சிக்கோப்பை அறிமுகப்போட்டியில் சதமடித்ததோடு, அந்த தொடரில் 7 போட்டிகளில் 572 ரன்கள் குவித்து கவனத்தை திருப்பினார். பின்னர் அவரை மேலும் பெரிதாக்கியது டிஎன்பிஎல்தான். 2021 இல் கோவை கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர் முதல் போட்டியிலேயே 5 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்தார். அவரை அஸ்வினும் டி20 தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார் என்று பாராட்டி இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற டிஎன்பிஎல் ஏலத்தில் கோவை கிங்ஸ் அணிக்காக 21.6 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.


குஜராத்தின் நம்பிக்கை:


குஜராத் அணியே அவரை அடிப்படை விலையான 20 லட்சத்திற்குதான் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஐபிஎல் போட்டியிலேயே தனது காலை பதித்து இருந்தாலும், இம்முறை மேலும் பெரிய வீச்சுடன் வந்து இறங்கியுள்ளார். முடிவில் இந்திய அணி வாய்ப்போடு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பலர் கருதுகின்றனர். ஆட்டநாயகன் விருது வென்ற அவர், "முதல் முறை இங்கு நிற்பதால் நடுங்குகிறது, என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஹர்திக்கின் கீழ் கேப்டனாக விளையாடுவதற்கு கொடுத்து வைத்திருக்கிறேன்", என்றார்.