இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட் அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃபிற்குள் நுழைந்துவிட்ட நிலையில், அடுத்து இருக்கும் இரண்டு இடங்களுக்கு தான் தற்போது கடுமையான போட்டி நிலவுகிறது. 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.
ப்ளே ஆஃபிற்குள் போகப்போவது யார் என்ற கேள்விக்கு பதிலளிக்க போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்றிய சென்னை அணிக்கு எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதல் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் ரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். திடீர் திருப்பமாக தோனியை மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்க சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் எந்த அளவிற்கு சாதகமாக இருக்கிறது என்பதை கணிக்க கால்குலேட்டருடன் அமர்ந்திருக்கின்றனர் ரசிகர்கள். புள்ளி பட்டியலில் கடைசிக்கு முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி, ப்ளே ஆஃபிற்குள் செல்ல சாத்தியங்கள் இன்னும் இருக்கதான் செய்கிறது. அது எப்படி என்று பார்க்கலாம்..
சென்னை அணிக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், மிகக் குறைவாக இருக்கிறது. அசாத்தியங்கள் நிகழ்ந்தால் மட்டுமே உள்ளே செல்லும் அளவிற்கு நூழிலையிலான வாய்ப்பிருக்கிறது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அட்டவணையில் கடைசிக்கு முதல் இடத்தில் இருந்தாலும் ரன்ரேட்டில் 0.028 புள்ளிகளுடன் பாசிடிவான இடத்தில் இருக்கிறது. அதற்கு முந்தைய இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் 10 புள்ளிகளுடன் இருக்கின்றன. அதில் கொல்கத்தா அணி, மற்றும் பெங்களூரு அணி ஏற்கனவே 12 போட்டிகளில் விளையாடிவிட்ட நிலையில் 10 மற்றும் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
சென்னை அணி மீதமிருக்கும் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுடன் நடைபெறவிருக்கும் 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியும் சென்னை அணியின் கனவை நனவாக்கும் இடத்தில் இருக்கின்றன.
பஞ்சாப் அணி அடுத்து விளையாடவிருக்கும் 3 போட்டிகளில் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு எதிராக வெற்றியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் தோல்வியும அடைய வேண்டும். இதனால் அந்த அணிக்கு 14 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், சென்னை அணியை விட குறைவான நெட் ரன்ரேட் இருக்க வேண்டும்.
கொல்கத்தா அணி அடுத்து விளையாடவிருக்கும் 2 போட்டிகளில் ஹைதராபாத்துடன் வெற்றிபெற்று லக்னோ அணியுடன் தோற்கவேண்டும். அதனால் 12 புள்ளிகளுடன் ப்ளே ஆஃபுக்குள் செல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு பறிபோகும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி அடுத்து விளையாடவிருக்கும் 3 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிபெற வேண்டும். அதே சமயத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணியிடம் தோற்கவேண்டும். அதனால் அவர்களுக்கு 12 புள்ளிகள் கிடைக்கும்.
அதே போல சன்ரைசர்ஸ் அணியும் மீதமிருக்கும் 3 போட்டிகளில் கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற்று, மும்பை மற்றும் பஞ்சாபிடம் தோற்கவேண்டும். அதனால் அந்த அணியும் 12 புள்ளிகளைப் பெறும்.
பெங்களூரு அணி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோற்றால் 14 புள்ளிகளுடன் நிலையாக இருக்கும். அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் தோற்க வேண்டும். அதனால் அந்த அணியும் 14 புள்ளியிலேயே இருக்கும்.
மேற்கண்ட எல்லாம் நிகழ்ந்து, அதே நேரத்தில் மீதமிருக்கும் 3 போட்டிகளில் சென்னை அணி அதிக ரன்ரேட்டுடன் வெற்றிபெற்றால் 3வது அல்லது 4வது இடம் கிடைக்கும்.
கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் 14 புள்ளிகள் எடுத்தாலும் கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் 4வது இடம் அமையும். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மீதமிருக்கும் போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட சென்னை அணிக்கான வாய்ப்பு பறிபோய்விடும். வியாழனன்று நடைபெறவிருக்கும் மும்பை இந்தியன்ஸ், சென்னை அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றால் கால்குலேட்டருக்கு வேலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் அசாத்தியங்கள் போன்று தோன்றலாம். ஆனால், விளையாட்டில் எதுவுமே சாத்தியம் தான். மேஜிக் நிகழுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.