IPL 2023: இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் உலகில் நடத்தப்படும் மற்ற லீக் போட்டிகளை விடவும் அதிகமானோர்களால் கவனிக்கப்படும் போட்டித் தொடராகும். கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். ஐபிஎல் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சில அரசியல் காரணத்தினால் பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐபிஎல் தொடங்கப்பட்ட காலம் முதல் கடந்த ஆண்டு வரை கலந்து கொண்டவர் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோ. பவுலிங் - ஆல் ரவுண்டரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானவர் ஆவார். அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு சென்னை அணியின் முக்கியன் வீரராக இருந்தார். சூதாட்ட விவகாரத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால், இரண்டு ஆண்டுகள் குஜராத் லையன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் மீண்டும் சென்னை அணிக்காக கடந்த 2022ஆம் ஆண்டு வரை விளையாடினார்.
மொத்தம் 161 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தனது சிறந்த பந்து வீச்சினால் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அவர் தான் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர். மேலும், 1,560 ரன்களை எடுத்துள்ள அவர், அணி வெற்றி இலக்கை எட்ட சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும் போது நுணுக்கமான பேட்டிங்கினால் சென்னை அணியை பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், இதுவரை ஐபிஎல் தொடரில் பல பிரிவுகளில் முதல் இடம் வகிக்கும் வீரர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அதிக ரன் விளாசியவர் தொடங்கி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வரை இடம் பெற்றுள்ளனர். பிராவோ பகிர்ந்துள்ள பதிவில் இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்து காணலாம்.
அதிக ரன்கள் - விராட் கோலி 6,624 ரன்கள்.
அதிக விக்கெட்டுகள் - பிராவோ 183 விக்கெட்டுகள்
அதிக சதங்கள் - கிறிஸ் கெயில் 6 சதங்கள் .
அதிக சிக்ஸர்கள் - கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்கள்
அதிக பவுண்டரிகள் - ஷிகர் தவான் 701 பவுண்டரிகள்
ஒரு சீசனில் அதிக ரன் எடுத்தவர் - 2016ஆம் ஆண்டில் விராட் கோலி 973 ரன்கள் எடுத்தார்.
ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் - பிராவோ 2013ஆம் ஆண்டும் ஹர்சல் பட்டேல் 2021 ஆம் ஆண்டிலும் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
அதிக முறை ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றவர் - டேவிட் வார்னர் இரு முறை ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுள்ளார்.
அதிக முறை ஊதா நிற தொப்பியை பெற்றவர்கள் - பிராவோ மற்றும் புவனேஷ்வர் குமார் தலா இரண்டு முறை ஊதா நிற தொப்பியை கைப்பற்றியுள்ளனர்.
அதிக டாட் பால்கள் வீசியவர் - புவனேஷ்வர் குமார் 1,465 டாட் பால்களை வீசியுள்ளார்.
அதிக ஸ்ட்ரைக் ரேட் - ஆண்ட்ரே ரஸ்ஸல் 177.88
சிறந்த எக்கானமி - ரஷித் கான் 6.37