ஐபிஎல் 2023 சீசனின் 34வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பந்துவீச வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வ் குமார் முதல் ஓவரிலேயே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிலிப் சால்ட்டை வீழ்த்தினார். இதன்மூலம், தற்போது ஐபிஎல் தொடரின் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் புவனேஷ்வர் குமார்.
முதல் ஓவரில் ஆதிக்கம் செலுத்தும் புவனேஷ்வர் குமார்:
இதுவரை ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார் முதல் ஓவரிலேயே அதிகபட்சமாக 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை, அவர் ஐபிஎல்லில் மொத்தம் 106 முறை முதல் ஓவரை வீசியுள்ளார், அதில் அவர் 23 சராசரியில் 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 பந்துவீச்சாளர்கள்:
- புவனேஷ்வர் குமார் - 23 விக்கெட்டுகள்.
- டிரென்ட் போல்ட் - 21 விக்கெட்.
- பிரவீன் குமார் - 15 விக்கெட்.
- சந்தீப் சர்மா - 13 விக்கெட்.
- ஜாகீர் கான் - 12 விக்கெட்டுகள்.
ஐபிஎல் 2023 டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு சிறப்பாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் 9வது இடத்திலும், டெல்லி கடைசியாக அதாவது 10வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் தத்தமது 7வது போட்டியில் இன்று விளையாடுகின்றன. இதுவரை 6 ஆட்டங்களில் ஹைதராபாத் அணி 2-ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 144 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே மற்றும் அக்சார் பட்டேல் தலா 34 ரன்கள் எடுத்தனர்.
ஹைதராபாத் அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களும், நடராஜன் 1 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.