சச்சின் டெண்டுல்கரின் மகனும்,  கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கரை, நாய் கடித்துவிட்டதாக அவரே பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


லக்னோ வெளியிட்ட வீடியோ:


மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற உள்ள சூழலில், அதற்காக வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு அணி வீரர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர். இதுதொடர்பான வீடியோவில், லக்னோ வீரர் ஒருவர், அர்ஜுனை டெண்டுல்கரை சந்தித்து நன்றாக இருக்கிறாயா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த அவர், தனது இடது கையில் நாய் கடித்துவிட்டதாக கூறியுள்ளார். நாயா எப்போது என கேட்க, இரண்டு நாட்களுக்கு முன்பு என பதிலளித்துள்ளார். 






நடப்பு தொடரில் அறிமுகமான அர்ஜுன்:


கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்று இருந்தாலுமே, நடப்பு தொடரில் தான் அவர் அறிமுகமானார். மொத்தமாகவே 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இவரை நடப்பு தொடருக்கான ஏலத்தில் 30 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.


லக்னோ - மும்பை மோதல்:


இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசனில் 63வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத உள்ளது இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.


பிளே-ஆஃப்சு சுற்றுக்கான தகுதிப்போட்டி:


புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் மும்பை அணி 3வது இடத்திலும், 6 வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் 13 புள்ளிகளை பெற்று லக்னோ அணி 4வது இடத்தில் தொடர்கிறது. இந்த சூழலில் இன்று நடைபெறும் போட்டியானது இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கான ஒரு தேடல் இந்த போட்டி.


இந்த போட்டி இரு அணிகளுக்கு மட்டுமல்லாமல், களத்தில் உள்ள வேறு சில அணிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.  இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்னும் மொத்தமே 8 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தி கொள்ள இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.