2022 ஐபிஎல் தொடருக்கான ஆயுத்தப்பணிகள் ஆரம்பமாகிவிட்டது. அந்த வரிசையில், ஒவ்வொரு அணியும் தன் அணி வீரர்களை தக்க வைத்து கொள்ளும் ரிடென்ஷன் முடிவடைந்துள்ள நிலையில், இந்த தொடரில் புதிய அணி குறித்த எந்த அறிவிப்புகளையும் வெளியிடக்கூடாது என்று பிசிசிஐ தடை விதித்திருந்தது. 


வழக்கமாக ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது. 


பஞ்சாப் கிங்ஸ் அணி, மயாங்க் அகர்வால் மற்றும் ஹர்ஷதீப் சிங் ஆகியோரை தக்க வைத்திருப்பதாக அறிவித்தது. இதனால், பஞ்சாப் அணியில் இருந்து முக்கிய வீரர்களான ராகுல், ரவி பிஸ்னோய், நிக்கோல்ஸ் பூரன் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டனர். 


இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்து வந்த ஆண்டி ஃப்ளவர் கடந்த வாரம் பதவி விலகுவதாகவும், அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். 


 






இந்தநிலையில், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 லக்னோ அணியானது ஆண்டி ஃப்ளவர் பயிற்சியாளராக இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) அனுமதியின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


அதேபோல், லக்னோ அணியின் கேப்டனாக பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. 


 






இதுகுறித்து லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், "ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் ஆண்டி கிரிக்கெட் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்துள்ளார். அவரது தொழில்முறையை நாங்கள் மதிக்கிறோம், அவர் எங்களுடன் இணைந்து செயல்பட்டு எங்கள் அணிக்கு மதிப்பு சேர்ப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார். 


தொடர்ந்து ஆண்டி ஃப்ளவர் பேசுகையில், "புதிய லக்னோ அணியில் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த வாய்ப்பளித்த உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.  1993 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எனது முதல் சுற்றுப்பயணத்திலிருந்து, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வது, விளையாடுவது மற்றும் பயிற்சியளிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். 


இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் நிகரற்றது மற்றும் லக்னோ அணியை வழிநடத்துவது உண்மையான பாக்கியம், புத்தாண்டில் உத்தரபிரதேசத்திற்கு நான் வரும்போது நிர்வாகத்தையும் ஊழியர்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்தார். 


முன்னதாக, ஜிம்பாவே கிரிக்கெட் அணிக்காக விளையாடிய ஆண்டி ப்ளவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அதனை அடுத்து, கடந்த 2020 சீசனில் ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.