ஐபிஎல் தொடரில் பந்து வீச வேண்டும் என்றாலே கோலிக்கு ஒரு நிமிட தயக்கத்தை கொடுக்கக் கூடிய, ஒரு சம்பவம் தொடர்பாக தான் இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்.


ரன் மெஷின் கோலி:


இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான கோலி, ரன் மெஷின் மற்றும் கிங் கோலி என பல்வேறு பெயர்களால் வர்ணிக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலிருந்தே பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 223 போட்டிகளில் களமிறங்கி 6624 ரன்களை விளாசியுள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 44 அரைசதங்கள் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலிலும், கோலி முதலிடத்தில் உள்ளார். பேட்டிங்கில் பல சாதனைகளை படைத்தாலும், பந்துவீச்சில் என்றுமே தன்னால் மறக்க முடியாத ஒரு மோசமான சம்பவத்தையும் கோலி படைத்துள்ளார். 


சென்னை -  பெங்களூரு மோதல்:


கடந்த 2012ம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 205 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியில் கெயில் 68 ரன்களையும், கோலி 57 ரன்களையும் சேர்த்தனர். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு,  டூ ப்ளெசிஸ் மற்றும் தோனி ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தனர். ஆனாலும், வெற்றி பெற கடைசி இரண்டு ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது.


கோலிக்கு நடந்த சம்பவம்:


இதனால் ஆர்சிபி அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதியதாக களமிறங்கி இருந்த ஆல்பி மார்கெலுக்கு எதிராக 19வது ஓவரை கோலி வீசினார். ஆனால், இந்த ஓவரில் அவரது பவுலிங் கேரியருக்கே பெரிய அடியாக இருக்கும் என கோலி எதிர்பார்த்து இருக்கமாட்டார். காரணம், அந்த ஓவரில் கோலி வீசிய 6 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 28 ரன்களை ஆல்பி மார்கெல் அடித்து விளாசினார். இதனால், பெங்களூரு அணிக்கு சாதகமாக இருந்த போட்டியை, ஒரே ஓவரில் சென்னை அணிக்கு சாதகமாக மார்கெல் திருப்பினார். ”எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா” என கூறும் வகையில், முகம் முழுவதும் சோகம் நிரம்பி ஒவ்வொரு பந்தின் முடிவிலும் கோலி கேப்டன் வெட்டோரியை பார்த்த சம்பவத்தை எந்த கிரிக்கெட் ரசிகராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதுவும் இளம் வீரராக இருந்த கோலி, தனது பிஞ்சு முகத்தில் காட்டிய உணர்ச்சிகள் இன்றளவும் கண்களில் நிற்கின்றன. இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தால்  பல சீசன்களுக்கு ஐபிஎல் தொடரில் கோலி பந்துவீசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பெங்களூரு அணி தோல்வி:


அதற்கடுத்த ஓவரில் 15 ரன்கள் அடிக்க வேண்டி இருக்க, பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் இலக்கை எட்டி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.