ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மெகா ஏலத்தில் ரவிசந்திரன் அஷ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. சென்னை அணியில் இடம் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
அஸ்வின் ஏற்கனவே சென்னை அணிக்காக பல ஆண்டுகள் ஆடியவர். பின்னர், அவர் பஞ்சாப் அணிக்காகவும், டெல்லி அணிக்காகவும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். போட்டிகளிலே அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலம் வருகிறது. ஏற்கனவே ஏலத்தில் தோனி, ருதுராஜ், மொயின் அலி மற்றும் ஜடேஜாவை 42 கோடிக்கு தக்கவைத்துள்ளனர். கையில் 48 கோடி மட்டுமே சென்னை அணியின் வசம் இருந்த நிலையில், அஷ்வினை எடுக்காமல் விட்டிருக்கிறது சென்னை அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்