டி20 போட்டிகள் கிரிக்கெட்டில் களைகட்டத் தொடங்கிய சமயத்தில்தான் தனியார் பெரும்புள்ளிகள் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து மோதவிடும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளும் கோலாகலமாகப் பெரும் வரவேற்புடன் தொடங்கின. 


இந்தியன் பிரீமியர் லீக் தனது 15வது சீசனில் உள்ளது, இதே நாளில்தான், ஏப்ரல் 18, 2008 அன்று, லீக் வரலாற்றில் முதல் போட்டி நடைபெற்றது. முதல் ஐபிஎல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இடையே நடைபெற்றது. பிரெண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் எடுத்ததால் கொல்கத்தா அன்று 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தற்போது 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது!. 15 ஆண்டுகளாக ஐபிஎல் ரசிகர்களின் சூப்பர்ஸ்டாராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெற்றிருக்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.






முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவித்து வருகிறது. இதனால், ரசிகர்களின் விமர்சனத்திற்கு வீரர்கள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், டாக்டர் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருதுராஜ், மொயின் அலி அவுட் ஆகி சென்ற பிறகு ஷிவம் டுபே, உத்தப்பா ஆகியோர் முதலில் பொறுமையாக ஆடி, 10 ஓவர்களுக்கு பிறகு ஆர்சிபி பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் மாறி மாறி அடித்து அணியின் ரன்களை வேகமாக ஏற்றினார்கள். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் அடித்த சிஎஸ்கே அடுத்த 10 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.


துபே, உத்தப்பா ஒரு ஓவருக்கு ஒரு சிக்சர் என 16 ஓவரில் இருந்து அடித்தனர். இருவரும் அரைசதம் அடித்த பிறகுதான், இன்னும் அதிரடி காட்டினர். சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை செய்யாமல் சென்றுவிட்டனர். இதில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் சதம் தொடலாம் என்ற நிலையில் துபே இருந்தார். ஆனால், அவர் அடித்த பந்து டு பிளிசஸ் இடம் கேட்ச் ஆனது. அவர் பந்தை கீழே வைத்ததால், 95 நாட் அவுட் உடன் துபே பெவிலியன் திரும்பினார். 


இறுதியில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. 200 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 21ஆவது முறையாக சிஎஸ்கே 200 அடித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பாக ஆர்சிபி 21 முறை 200 ரன்கள் அடித்த என்ற சாதனையை கொண்டிருந்தது. அந்த சாதனையை தற்போது சிஎஸ்கே சமன் செய்தது.