அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி விவரத்தை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. கேப்டன் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். 


கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்று உள்ளனர்.


ஐபிஎல் தொடர் ஆரம்பமான முதல் சீசனில் இருந்து, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியில் எந்தெந்த ஐபிஎல் அணியைச் சேர்ந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பதை பார்ப்போம்!


மும்பை இந்தியன்ஸ் - 6 வீரர்கள்






டி-20 உலக்கக்கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ரோஹித் ஷர்மாவோடு இணைந்து மேலும் 5 வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து உலக்கோப்பையில் விளையாட உள்ளனர். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ராகுல் சஹர், பும்ரா என ஆறு வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.


டெல்லி கேப்பிடல்ஸ் - 4 வீரர்கள்


4 ஆண்டுகளுக்குப் பிறகு டி-20 அணியில் இடம் பிடித்திருக்கும் அஷ்வின், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அக்சர் படேல் ஆகியோருடன் ரிசர்வ் வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும் டி-20 உலக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியைத் தொடர்ந்து, 4 வீரர்களை உலகக்கோப்பைக்கு அனுப்பியுள்ளது டெல்லி கேப்பிடல்ஸ். 


சென்னை சூப்பர் கிங்ஸ் - 3 வீரர்கள்






சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஜடேஜா, டி-20 அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டர் வீரரான இவர், டி-20 உலகக்கோப்பையில் விளையாட உள்ளார். அவரைத் தவிர்த்து, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


பஞ்சாப் கிங்ஸ் - 2


பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் கே.எல் ராகுல், ஷமி ஆகிய இரண்டு வீரர்கள் டி-20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - 1






பெங்களூரு அணி சார்பில் இந்திய அணி கேப்டன் கோலி மட்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுக்காமல் பிசிசிஐ தவிர்த்திருக்கலாம்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 1


மிஸ்ட்ரி ஸ்பின்னர் என அழைக்கபப்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கிரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து டி-20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஒரே வீரர். இவர் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் சிறப்பாக விளையாடுவார் என தெரிகிறது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 1


51 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி இருக்கும் புவனேஷ்வர் குமார், 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான இவர், சிங்கிள் மேனாக இந்திய அணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.