அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான, மினி ஏலம் கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து உள்ளனர். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, 14 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களும் இந்த ஏலத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துள்ளனர்.
10 அணி நிர்வாகங்களும் தங்களது அணியை வலுப்படுத்த தேவையான வீரர்களை தேர்வு செய்ய, முனைப்புடன் இந்த ஏலத்தில் பங்கேற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.20.45 கோடியை கையிருப்பில் கொண்டு, 2 வெளிநாட்டு விரர்கள் உட்பட 7 இடங்களை நிரப்பும் நோக்கில் ஏலத்தில் பங்கேற்றது. தொடக்கத்தில் பல முக்கிய வீரர்களை குறிவைத்து, சென்னை அணி ஏலத்தில் ஈடுபட்டது.
ரகானே:
அந்த வகையில் மினி ஏலத்தில் முதல் வீரராக, இந்திய அணிக்காக விளையாடி வரும் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ்:
ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டதும் அவரை ஏலத்தில் எடுக்க பெங்களூர், ராஜஸ்தான், லக்னோ மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் வரிந்து கட்டின. மாறி மாறி பல அணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்க, ஏலத்தொகை 10 கோடியை கடந்தது. இறுதியில் சென்னை அணி, ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஸ்டோக்ஸை ஏலத்தில் வென்றது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸ் அண்மையில், இங்கிலாந்து அணி டி-20 உலகக்கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் ரஷீத்:
ஆந்திராவை சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அண்மையில் ரஞ்சிக்கோப்பை தொடரில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீத், சையத் முஷ்டக் அலி தொடரிலும் தனது திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
நிஷாந்த் சிந்து:
ஹரியானவை சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சதம் விளாசி, வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் முனைப்பு காட்டின. இறுதியில் ரூ. 60 லட்சத்திற்கு நிஷாந்த் சித்துவை சென்னை அணி ஒப்பந்தம் செய்தது.
கைல் ஜேமிசன்:
2021ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை, அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 27 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் கடந்த 2020ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
அஜய் மண்டல்:
சத்திஸ்கரை சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.