Paris Shooting: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மத்திய பாரிஸில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பிரெஞ்சு தொலைக்காட்சி BFM TV செய்தி வெளியிட்டுள்ளது.


துப்பாக்கிச்சூடு குறித்து பாரிஸ் காவல்துறை தரப்பு கூறுகையில், "Rue d'Enghien பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்" 


துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு 60 வயது இருக்கலாம் என்றும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் நோக்கம் குறித்து தெளிவான தகவல்கள் எதவும் இல்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த 4 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். 


 






சம்பவத்தை நேரில் கண்ட கடைக்காரர் ஒருவர், "Rue d'Enghien பகுதியில் ஏழு முதல் எட்டு முறை வரை துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளனர். கடும் அச்சம் நிலவி வருகிறது. எங்களை நாங்களே கடையில் உள்ளே வைத்து பூட்டி கொண்டோம்" என்றார்.


துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட முதியவர் தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளார்.


2015ஆம் ஆண்டு முதலே, பாரிஸை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தாக்கி வருகின்றன. இந்த சூழலில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, அங்கு அவ்வப்போது கும்பல் வன்முறை நிகழ்ந்து வருகிறது.


சமீப காலமாகவே, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


கடந்த 2015ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல் காரணமாக 26 பேர் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில், 60 பேர் வரை பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகின.


அதேபோல, 2021ஆம் ஆண்டு, பாரிசில் மருத்துவமனை முன் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் காவலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.