கொரோனாவின் 2வது அலை ஒருபக்கம் அச்சுறுத்தினாலும், மறுபக்கம் கிரிக்கெட் காய்ச்சல் இன்று முதல் ரசிகர்களை ஆட்டிப் படைக்க உள்ளது.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. மும்பை அணி ஐ.பி.எல். தொடரில் பயம் அறியாத தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை அணி, ஹாட்ரிக் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.




ரோகித் சர்மா, பொல்லார்ட், சூரியகுமார் யாதவ், பாண்ட்யா சகோதரர்கள், பும்ரா, பொல்லார்ட் என அவெஞ்சர்ஸ் வீரர்கள் போல் பலம் வாய்ந்த அணியாக மும்பை களமிறங்குகிறது. இதனால் இம்முறையும் மும்பை அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சொந்த மண்ணான மும்பையில் களமிறங்காதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.




மறுபக்கம், கோப்பையை வெல்ல அனைத்து தகுதியும் இருந்தும், ஏன் தோல்வி அடைகிறோம் என்ற காரணமே தெரியாமல் இருக்கும் பெங்களூரு அணி உள்ளது. கோலி, தேவ்தத் படிக்கல், டிவில்லியர்சுடன் அதிரடி வீரர் மேக்ஸ்வல் இணைந்துள்ளது அந்த அணிக்கு பலமாக கருதப்படுகிறது. சாஹல், சிராஜ், கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் என நம்பப்படுகிறது. இருப்பினும் பெங்களூரு அணியின் நடுவரிசையும், கோலி,டிவில்லியர்சை நம்பியே பேட்டிங் இருப்பதும் பெங்களூரு அணியின் பலவீனமாக கருதப்படுகிறது.


மும்பை அணி ஆதிக்கம் செலுத்துமா? இல்லை பெங்களூரு அணி அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..