ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபிள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதே போட்டிகள் நிறுத்தப்பட காரணமாக அமைந்தது.
இதனால், இந்தியாவில் நடைபெற இருந்த மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க வாய்ப்பிருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக முன்னரே அறிவிப்புகள் வெளியானது. அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு முதல் 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், ஐபிஎல் தொடரில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் நடத்துவதில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என தெரிகிறது. ஐபிஎல் ஆக்ஷன் வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என தெரிகிறது. வீரர்களுக்கான ஆக்ஷனில், இப்போது ஒரு அணி, 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். ஆனால், அடுத்த ஆக்ஷனின்போது 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளும்படியான மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு அளிக்கும் மொத்த ‘சாலரி பர்ஸ்’ லிமிட், 85 கோடி ரூபாயில் இருந்து 90 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக சேர்க்கப்படும் இரு அணிகளுக்கான போட்டியில், அகமதாபாத், பூனே, லக்னோ, கான்பூர், கெளஹாத்தி, இந்தோர், கொச்சி, ராய்பூர், திருவணந்தபுரம் ஆகிய நகரங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடுகின்றன. எனினும், அகமதாபாத் மற்றும் பூனே அணிகள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.