மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 16-வது ஐ.பி.எல், ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்சும், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூர் அணியும் இன்றை ஆட்டத்தில் களமிறங்கியது.


டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.  ஜோஸ் பட்லர் 8 ரன்களுக்கும்,  மனன் வோரா 7 ரன்களுக்கும், டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்ததால், தொடக்கமே ராஜஸ்தான் அணி தடுமாறியது. இதையடுத்து, இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே இணை நிதானமாக ஆடியது. 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.




அவருடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து 46 ரன்களை சேர்த்திருந்த ஷிவம் துபேவும் ஆட்டமிழக்க, களத்தில் இறங்கிய ராகுல் திவேதியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இறுதியில் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 177 ரன்களை குவித்திருந்தது. பெங்களூர் அணியில் முகமது சிராஜ் 4 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


பெங்களூர் அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ள நம்பிக்கையில் களமிறங்கிய ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் சுக்குநூறாக்கினார். ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை மட்டுமே இருவரும் கடைபிடித்தனர். தேவ்தத் படிக்கல் ரன் ஏது்ம எடுக்காமல் இருந்தபோது அளித்த கடினமான கேட்ச் வாய்ப்பை முஸ்தபிஷிர் தவறவிட்டார். அந்த கேட்சை தவறவிட்டதற்காக மொத்த ராஜஸ்தான் அணியினருமே வேதனைப்பட்டிருப்பார்கள். கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட தேவ்தத் படிக்கல் யார் பந்துவீசினாலும் பந்துகளை மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு அனுப்புவதிலே குறியாக இருந்தார்.





மைதானத்தில் விராட் கோலியையும், தேவ்தத் படிக்கல்லையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 7.3 ஓவர்கள் இருந்தபோதே தேவ்தத் படிக்கல் அரைசதத்தை கடந்துவிட்டார். இவர்களை பிரிப்பதற்கு சஞ்சு சாம்சன் ஸ்ரேயாஸ் கோபால், சேட்டன் சவுகாரியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தபிஷிர் ரஹ்மான், ராகுல் திவேதியா, ரியான் பராக் என அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்திவிட்டார். ஆனாலும், எதுவும் பலனளிக்கவில்லை.




பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைத்த இந்த மைதானத்தில் 16.1 ஓவரின்போது தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்து இந்த தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதியில் பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி47 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 72 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 101 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 38 ரன்களை வாரி வழங்கினார்.  இந்த வெற்றி மூலம் பெங்களூர் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.