மும்பை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய 16-வது ஐ.பி.எல். ஆட்டம் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கேப்டன் விராட் கோலி, முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய ஜோஸ் பட்லர் அணியின் ஸ்கோர் 14-ஆக இருந்தபோது முகமது சிராஜின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.


அதைத்தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அப்போது, மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மனன்வோரா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்கும் முன்பே முகமது சிராஜின் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.




பின்னர், இளம் வீரர் ஷிவம்துபே சஞ்சு சாம்சனுடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது, 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். ரியான் பராக் இறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, தனி ஆளாக  ராகுல் திவேதியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


 


கிறிஸ் மோரிஸ் 7 ரன்களுக்கும், சேத்தன் சவுகாரியா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். திவேரியா மட்டும் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்துள்ளது.  பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.