சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற 13-வது ஐ.பி.எல். ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் மும்பை அணியும், ரிஷப் பந்த்தின் டெல்லி அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் வெறும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் 44 ரன்களுக்கு வெளியேற பாண்ட்யா சகோதரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பொல்லார்ட் 2 ரன்களுக்கு வெளியேறினர். இஷன் கிஷனும், ஜெயந்த் யாதவும் நிதானமாக ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். இஷான்கிஷான் 26 ரன்களிலும், ஜெயந்த் யாதவ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் மும்பை அணி 137 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவானும், ஸ்டீவ் ஸ்மித்தும் துரிதமாக ரன் சேகரித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 29 பந்துகளில் 33 ரன்கள் சேகரித்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 42 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 ரன்களை சேகரித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டெல்லி இளம் கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்களை சேர்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.




அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டத்தில் பரப்பு ஏற்பட்டது. இதனால், கடைசி 10 பந்துகளுக்கு 16 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஹெட்மயரும், லலித் யாதவும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர். லலித் யாதவ் 25 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 22 ரன்களும், ஹெட்மயர் 9 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களும் குவித்து கடைசியில் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 138 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் உள்ளது.