உலக வானிலை மையம் ஆண்டுதோறும் உலக வானிலை நிலை அறிக்கை (state of Global Climate Report) என்ற ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் அந்தாண்டில் பூமியின் வெப்ப அளவு மற்றும் பூமி சந்தித்த பேரிடர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவை இந்த அறிக்கையில் இடம்பெறும். 


அதன்படி 2020-ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்று வெளியானது. இந்த அறிக்கையின்படி  2020-ஆம் ஆண்டு வெப்பம் அதிகமாக பதிவாகிய 3 ஆண்டுகளில் ஒன்று என்று தெரியவந்துள்ளது. மேலும் 2020-ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு மற்றும் அதிக வெப்பம் பல லட்சம் மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கியது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. 


மேலும் கடந்த ஆண்டு உலகத்தின் சராசரி வெப்பம் தொழிற்சாலை தொடக்கத்திற்கு முன்பு இருந்த சராசரியை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இது ஐநாவின் பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பு கணித்த 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு மிகவும் நெருங்கிய அளவு. 




ஐநாவின் பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பின் கணிப்பின்படி தொழிற்சாலை தொடக்கத்திற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருந்தால் பெரிய பாதிப்பு உருவாகும். அதாவது உலகில் பெரிய அளவில் பேரிடர்கள் உருவாகும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது. இதற்காக பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் மாநாட்டில் உலக நாடுகள் வெப்ப சராசரியை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வைக்க உறுதி எடுத்தன. 


2020-ஆம் ஆண்டு லா நினா இருந்தபோதும் பூமியின் வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பொதுவாக எல் நினோ காலங்களில் தான் பூமியின் வெப்பம் மிகவும் அதிகரிக்கும். 2016-ஆம் ஆண்டு பூமியின் வெப்பம் மிகவும் அதிகமாக இருந்தது. அந்த ஆண்டு ஒரு எல் நினோ ஆண்டாக இருந்தது. எனவே பருவநிலை மாற்றத்திற்கு எல் நினோ தவிர பிற காரணங்கள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே பருவநிலை மாற்றத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


எல் நினோ மற்றும் லா நினா:


பொதுவாக பசிபிக் பெருங்கடலில் வீசும் காற்று கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி வீசும். இதனால் பசிபிக் கடலின் மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும். அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும். இந்த சூழலை லா நினா என்று அழைப்பார்கள்.




ஆனால்  'எல்நினோ' காலத்தில் இந்தச் சூழ்நிலை அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதாவது பசிபிக் கடலின் மேற்குப் பகுதி குளிர்ந்த நிலையில், அதன் கிழக்குப் பகுதி அதிக வெப்பத்துடனும் காணப்படும். இதனால் பசிபிக் கடலில் காற்று மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசை நோக்கி வீச தொடங்கும். இதனால் மேற்கு பசிபிக் பகுதியில் மழைப்பொழிவு குறையும். அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில்  வறட்சி ஏற்படும். அதேபோல் பெரு, ஈக்வேடார், அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்படும்.