2021 ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் 35வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த சீசனின் முதல் பாதி சிறப்பாக அமைந்திருந்ததால், இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இரு அணிகளும் திட்டமிடும். 


இரண்டாம் பாதியில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது சென்னை அணி. முதல் போட்டியில், கொல்கத்தாவை எதிர்கொண்ட பெங்களூரு அணி, 92 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் எளிதாக சேஸ் செய்த கொல்கத்தா, 10 ஓவர்களில் போட்டியை முடித்தது. 






ஷார்ஜாவில் சிஎஸ்கே, ஆர்சிபி:


கடைசி சீசனில், ஷார்ஜாவில் நடைபெற்ற மூன்று போட்டிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளதால், இந்த தொடர் தோல்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க போராடு. பெங்களூரு அணியை பொருத்தவரை, மூன்றில் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில், இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 26 போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இரு அணிகளும் மோதி கொண்டபோது, 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிரடி வெற்றி பெற்றது. ஒரு சீசன் சிறப்பாகவே அமைந்திருந்தாலும், சென்னை அணியுடனான போட்டியில் மட்டும் பெங்களூரு சொதப்புவது வழக்கமாகிவிட்டது. இதை மாற்றி அமைக்க, இன்று பெங்களூரு திட்டமிடும். சென்னையை பொருத்தவரை, பெங்களூரு அணியுடனான ஆட்டம் என்பது எப்போதும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. மும்பையைப் போலவே, சென்னை, பெங்களூரு மோதும் போட்டிகளும் பெரிது எதிர்ப்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று!






இந்த சீசனோடு கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதால், இனி வரும் ஒவ்வொரு போட்டியும் பெங்களூரு அணிக்கு முக்கியமானதாக இருக்கும். போட்டிகளை வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து, கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் ஆர்சிபி விளையாட வேண்டும். இரண்டாம் பாதியில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்யாத ஆர்சிபி இன்றைய போட்டியில் சென்னையை வீழ்த்தி கம் - பேக் கொடுக்க காத்திருக்கின்றது.