டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 23-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதின. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை அணியும் மோதியதால், ஹைதராபாத் அணியே அதிக நெருக்கடியுடன் களமிறங்கியது. டாசில் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, இன்னிங்ஸை தொடங்கிய டேவிட் வார்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், ஜானி பார்ஸ்டோ ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஹைதராபாத் அணியின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான மணிஷ்பாண்டே களமிறங்கினார்.




டேவிட் வார்னர் கேப்டன் என்ற பொறுப்புணர்வுடன் ஏதுவான பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினார். அணியின் ஸ்கோர் 128-ஆக உயர்ந்தபோது 55 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களை குவித்திருந்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். அதுவரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த மனிஷ் பாண்டே, வார்னர் ஆட்டமிழந்த பிறகு அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். அவருக்கு துணையாக கனே வில்லியம்ஸும் களமிறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


மனிஷ் பாண்டே 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 61 ரன்களை குவித்து இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 10 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், மனிஷ் பாண்டே ஆட்டமிழந்த பிறகு, சென்னை ரசிகர்களால் கடந்த முறை வறுத்தெடுக்கப்பட்ட கேதர் ஜாதவ் களமிறங்கினார். 4 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 12 ரன்களை எடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார். இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை ஹைதராபாத் அணி குவித்தது.




சென்னை அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்ற நிம்மதி பெருமூச்சுடன், சென்னை அணிக்கு பந்துவீச ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் களமிறங்கினர். அந்த அணியில் நடராஜன் இல்லாத வெற்றிடம் இந்த போட்டியில் தெளிவாக காணப்பட்டது. சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டுப்ளிசிசும் எந்தவித சிரமும் இல்லாமல் ஹைதரபாத் அணியின் பந்துவீச்சை எல்லைக் கோட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். குறிப்பாக, இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் எந்தவித பதற்றமும் இல்லாமல் `ப்ளேஸ்’ பார்த்து பவுண்டரிகளை அடித்துக் கொண்டிருந்தார். சுஜித் வீசிய ஆட்டத்தின் 11 ஓவரில் மட்டும் ருதுராஜ் அழகாக ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்ததுடன் அரைசதத்தையும் பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிப்பதற்காக டேவிட் வார்னர் பல களவியூகங்களை அமைத்தும் எந்தவித முயற்சியும் பலனளிக்கவில்லை.




ருதுராஜ் கெய்க்வாட் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷீத்கானின் ஒரே ஓவரிலே 3 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இறுதியில், அதே ஓவரில் ரஷீத்கான் பந்துவீச்சில் போல்டாகினார். ருதுராஜ் 44 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்தார். அடுத்து களமறிங்கிய மொயின் அலி, 3 பவுண்டரிகளை அடித்த நிலையில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டுப்ளிசிசும் 38 பந்துகளில் 56 ரன்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். 3 விக்கெட்டுகளையும் ரஷீத்கானே வீழ்த்தினார். சென்னை அணியின் வெற்றி எளிதாகிவிட்டதால் அடுத்த இறங்கிய சுரேஷ் ரெய்னா 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களும், கடந்த போட்டியின் நாயகன் ஜடேஜா 7 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தனர். இறுதியில் 18.3 ஓவர்களில் சென்னை அணி 173 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, இந்த தோல்வியால் தொடர்ந்து கடைசி இடத்திலே நீடிக்கிறது. இந்த போட்டியின் நாயகனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டார்.