வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலால் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, அவசர ஆலோசனை மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்து வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், அணி நிர்வாகிகள் என அனைவரையும் பாதுகாப்பாக தங்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டிய பொறுப்பை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் வெளிநாட்டு வீரர்களை எவ்வாறு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்பதே பிசிசிஐ-க்கு புதிதாக ஏற்பட்டுள்ள தலைவலி..
இந்தியாவில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கண்ட சில உலக நாடுகள், இந்தியாவை ரெட் லிஸ்ட் செய்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டை பொருத்தளவில் மே 15ஆம் தேதி வரை யாரும் இந்தியாவிலிருந்து பயணம் செய்ய அனுமதி கிடையாது. அதே போல் பிரிட்டன் பயணம் செய்பவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் தொற்று இல்லை என உறுதி ஆன பின்பே உள்ளே அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து வரும் நபர்கள் இரண்டு வார காலம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டிலோ இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்யுங்கள் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன, ஆனால் தற்போது வரை அனுமதி மறுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய வீரர்களின் நிலை என்ன ?
ஐபிஎல் 2021 தொடரில் ஒட்டுமொத்தமாக 63 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் தான் அதிகம். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிளென் மாக்ஸ்வெல் என 14 வீரர்கள் தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 40 பேர் பையோ பப்பிலில் உள்ளனர். இது குறித்து கருது தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் வீரர்களுக்கு எந்த தனி சலுகையும் வழங்கப்படாது என அறிவித்துவிட்டார். அதனால் வேறொரு நாட்டிற்கு சென்று அங்கே தங்கி, அதன் பிறகே தாய் நாடு செல்லும் நிலை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பி.சி.சி.ஐ நிர்வாகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் அணிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதே போல் இயான் மோர்கன், டீ காக், கேன் வில்லியம்சன் என அனைத்து நாட்டை சேர்ந்த வீரர்களும் இங்கே உள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 11 வீரர்கள், தென்னாபிரிக்காவில் இருந்து 10 வீரர்கள், 9 மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள், 8 நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் பையோ பப்பிளில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் சென்றடைய அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடமும், ஐபிஎல் அணிகள் உடனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் திட்டமிடல்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில்தான் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் ஐவி வரைந்து, எழுதிய ஒரு கடிதத்தை பகிர்ந்துள்ளார். அதில் "ப்ளீஸ் டாடி, வீட்டிற்கு உடனே கிளம்பி வாருங்கள், நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம், லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்..
வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் மனநிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது இந்த கடிதம். தாயகம் சென்றடைய வீரர்கள் இந்தியாவில் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களை காண அவர்களது குடும்பங்கள் தாய்நாட்டில் காத்துக்கொண்டுள்ளனர்.