ஆஸ்திரேலிய ஓபன் 2024ல் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் சுமித் நாகல். ஆஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் சுமித் நாகல்,  31-ம் நிலை வீரரான அலெக்சாண்டரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். 35 ஆண்டுகால வரலாற்றில் இந்திய டென்னிஸ் வீரர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் தரவரிசை வீரரை தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும். சுமித் நாகலின் ஏடிபி தரவரிசை 137 ஆகும். 


போட்டியில் என்ன நடந்தது?


சுமித் நாகல் போட்டி தொடங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டிலேயே ஆதிக்கம் செலுத்தினார். அலெக்சாண்டரின் சர்வீஸை மூன்று முறை முறியடித்த அவர், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் எளிதாக வென்றார். 


தொடர்ந்தும், இரண்டாவது செட்டில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சுமித். இரண்டாவது செட்டில் அலெக்சாண்டர் பப்லிக்கும் சில தவறுகளை செய்ய, இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாகல் இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் இரு வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் டை பிரேக்கில் நாகல் வெற்றியை தனதாக்கினார்.  இந்த செட்டை 7-6 என கைப்பற்றி போட்டியையும் வென்றார்.


சுமித் நாகல் தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றில் பப்லிக்கை நேர் செட்களில் தோற்கடித்தார். 26வயதான நாகல் தகுதிச் சுற்றுப் போட்டியின் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேறினார். இந்த முதன்மை சுற்றானது இரண்டு மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த நிலையில், உலகின் 31ம் நிலையான அலெக்சாண்டர் பப்லிக்கை, 137வது இடத்தில் உள்ள சுமித் நாகல் வீழ்த்தினார். 






வரலாற்று சிறப்புமிக்க தருணம்:


சுமித் வெற்றிபெற்ற வீடியோவை ஆஸ்திரேலிய ஓபனின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்டது. வீடியோவில் சுமித் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். வெற்றிக்கு பின் இந்திய வீரர் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் கைகுலுக்கினார். இதைத் தொடர்ந்து அவர் சென்று அவரது நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.






புதிய சாதனை 


1989ம் ஆண்டுக்கு பிறகு தரவரிசை வீரர் ஒருவரை ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் நாகல் பெற்றுள்ளார். முன்னதாக, இந்த சாதனையை ரமேஷ் கிருஷ்ணன் படைத்திருந்தார். இரண்டாவது சுற்றில் ஸ்வீடனின் மேட்ஸ் விலண்டரை தோற்கடித்தார். அப்போது டென்னிஸ் தரவரிசையில் உலகின் முன்னணி வீரராக விலாண்டர் இருந்தார்.


2013-க்குப் பிறகு ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் நாகல் ஆவார். சோம்தேவ் தேவ்பர்மன் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் தரவரிசை வீரரை தோற்கடித்துள்ளார்.